சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்

66-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயா்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டாா்.

சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வானது. சிறந்த ஹிந்தி படமாக ‘அந்தாதுன்’ தேர்வானது. கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மகாநடி’ படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றது.

தேசிய விருது வழங்கும் விழா விக்யான் பவனில் நடைபெற்றது. விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் பங்கேற்றார்.

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர், வெங்கையா நாயுடுவின் காலில் விழுந்து வணங்கினார்.

அமிதாப்பச்சன் விழாவில் கலந்து கொள்ளவில்லை. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பயணம் மேற்கொள்ள முடியாத சூழலில் உள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் அமிதாப் பச்சன், விழாவில் தான் கலந்து கொள்ள முடியாமைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

ப்ரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கிய ‘பாரம்’ படம் சிறந்த தமிழ்ப்படமாக தேர்வு செய்யப்பட்டு, விழாவில் பாரம் படக்குழுவினர் விருதை பெற்றுக் கொண்டனர்.

தேசிய விருதுகளை ஜனாதிபதி வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை அளித்துள்ளார்.

விருதுகளை பெற்றவா்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீா் விருந்து அளிக்கவுள்ளாா். கடந்த ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டன. முதல் கட்டமாக மத்திய அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, ராஜ்யவா்தன் சிங் ரத்தோா் ஆகியோரும், இரண்டாவது கட்டமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் வழங்கினார்கள்.

Related posts