இன்றைய முக்கிய இந்திய செய்திகள் 23.12.2019 திங்கள் காலை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் 15 பேர் பலியாகினர். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மேலும், பகுஜன் சமாஜ் கட்சி வன்முறைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ள மாயாவதி, உத்தர பிரதேசத்தில் நடந்த வன்முறை தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தி அப்பாவிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

———

சென்னையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்றது பேரணி அல்ல போர் அணி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மத்திய அரசை கண்டித்து தலைவர்கள் கோஷம் எழுப்பினர். குடியுரிமை சட்ட திருத்த‌த்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக கூட்டணி தலைவர்கள் முழக்கம் எழுப்பினர்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் நடைபெற்றது பேரணி அல்ல போர் அணி. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும்வரை திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும். திமுக பிரபலம் அடைய விளம்பரத்திற்காக துணை நின்ற அதிமுகவுக்கு நன்றி. பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி என கூறினார்.

—–

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரணி நடத்துகிறார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

பிரச்சாரத்தின் ஊடே செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வரின் சாதனைகளை எடுத்துக்கூறி மக்களை சந்தித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயமாக 100 சதவீத வெற்றி பெறுவோம்.

தமிழக அரசு குடிமராமத்துப் பணிகள் மூலம் நீர் மேலாண்மையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தருகிறோம். அதனை எல்லாம் எடுத்துச் சொல்லி நாங்கள் வாக்கு சேகரித்து வருகிறோம்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. ஆனால் அப்படி அமைதிப் பூங்காவாக இருக்கக் கூடாது என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் உள்ள ஸ்டாலினின் எண்ணம். அதனாலேயே இந்தப் பேரணியை நடத்தியுள்ளார்.

தமிழக மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம். தமிழகம் பற்றி எரிய வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். ஏனென்றால் தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்து ஸ்டாலினின் வயிறு பற்றி எரிகிறது.
அதனால் அதிமுக அரசு மீது அவதூறு பரப்பி பழிச்சொல் கற்பித்து வருகிறார்.

திருக்குரானில், அவதூறு மூலமாக ஒருவரை வீழ்த்த நினைத்தால் அது மிகப் பெரிய பாவம் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பாவத்துக்கான பலன் வரும் என்றும் சொல்லப்படுகிறது. இதைத்தான் நான் ஸ்டாலினுக்கும் சொல்ல விரும்புகிறேன்.

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து முதல்வர்களும் தமிழகத்தின் முதல்வரை பார்த்தே எளிமை, நீர் மேலாண்மையை கற்றுக் கொள்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நிறைய பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது” எனப் பேசினார்.

——

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான ஐந்து கட்ட தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில், காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கூட்டணிக்குக் கிடைக்கும் முன்னிலையால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள தொகுதிகள் 81. இதில் ஆட்சி அமைக்க 41 தொகுதிகள் தேவை. இதற்காக, அனைத்துக் கட்சிகள் உள்ளிட்ட 1,215 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவர்களுக்காக ஐந்து கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் ஜார்க்கண்டின் 24 இடங்களில் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் தொங்கு சபைக்கான சூழல் இருந்தது.

பிறகு, காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஜேம் எம் எம்- காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இங்கு ஆளும் கட்சியான பாஜகவுக்கு 27 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகள் தெரிகின்றன.

கட்சி வாரியான முன்னிலை நிலவரத்தில் ஜேஎம்எம் 22, காங்கிரஸ் 11, ராஷ்டிரிய ஜனதா தளம் 4, பகுஜன் சமாஜ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனின் பிரிவு 1, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் கட்சி 3, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா மற்றும் இதர கட்சிகள் தலா 4 உள்ளன.

இது குறித்து பிஹாரின் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடியின் முக்கியத் தலைவருமான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் கூறும்போது, ”ஜேஎம்எம் தலைமையிலான எங்களது மெகா கூட்டணிக்கு வெற்றி கிடைக்க உள்ளது. ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவி வகிப்பார்” எனத் தெரிவித்தார்.

எனினும், இதில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது பிற்பகலில் தெளிவாகத் தெரியும் நிலை உள்ளது. கடந்த 2014 தேர்தலில் பாஜக 37 தொகுதிகள் பெற்று மற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்திருந்தது.
இதன் முதல்வராக பாஜகவின் ரகுவர் தாஸ் பதவி வகித்திருந்தார்.

Related posts