அழுத்தமான கதையில் விஜய்சேதுபதி

கடைசி விவசாயி என்ற அழுத்தமான கதையில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

விஜய்சேதுபதி இமேஜ் பார்க்காமல் வில்லன் வேடங்களிலும் மற்ற பெரிய நடிகர்கள் படங்களில் கவுரவ தோற்றங்களிலும் நடிக்கிறார். முந்தைய படங்களான சீதக்காதியில் வயதானவராகவும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும், ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாகவும், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டியில் போர் வீரனாகவும் வந்தார்.

இப்போது விஜய்யுடன் நடிக்கிறார். நண்பராக வருகிறாரா? அல்லது விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா? என்பதை படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கடைசி விவசாயி என்ற இன்னொரு அழுத்தமான கதையில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். காக்கா முட்டை படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற மணிகண்டன் இயக்கத்தில் இந்த படம் தயாராகி உள்ளது. இவர் ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். கடைசி விவசாயி படத்தின் டிரெய்லரை விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பில்கேட்சிடம் பேசி விட்டாயா? என்று ஒருவர் கேட்க நான் பேசி விட்டேன். அவர்தான் என்னுடன் பேசவில்லை என்ற நக்கலான வசனத்தோடு டிரெய்லரில் அறிமுகமாகும் விஜய்சேதுபதியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. குரங்குக்கு வாழைப்பழம் கொடுத்து அவர் பேசும் வசனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதாகவே கூறப்பட்டது. ஆனால் டிரெய்லரில் முதியவர் ஒருவரையே கதாநாயகன் போன்று காட்டி உள்ளனர்.

Related posts