ஈழத்தமிழர்களுக்கு நீதி இலங்கை அதிபரிடம் பேசப்பட்டதா?

ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவது குறித்து இலங்கை அதிபரிடம் பேசப்பட்டதா என நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் வைகோ (ம.தி.மு.க.), இந்திய-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்காக, இலங்கை அதிபருடன் மத்திய அரசு பேசியதா? என்றும், ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவது குறித்து பேசப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் பதில் அளித்து கூறியதாவது:-

பிரதமரின் சிறப்புத் தூதராக, வெளியுறவுத்துறை மந்திரி, நவம்பர் 19-ந்தேதி இலங்கைக்குச் சென்றார். இந்தியாவுக்கு வருகை தருமாறு, இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, 28-30 ஆகிய நாட்களில், இலங்கை அதிபர் இந்தியா வந்தார். ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து, அனைத்துக் கோணங்களிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

மக்கள் ஆட்சிக் கோட்பாட்டில் பற்றுக் கொண்டுள்ள, பன்முகத்தன்மை வாய்ந்த, மனித உரிமைகளை மதிக்கின்ற, ஒன்றுபட்ட இலங்கைக்குள், அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, அனைத்துத் தரப்பினருக்கும் இணக்கமான ஒரு தீர்வு காண வேண்டும் என்றும், அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும், இந்திய அரசு வலியுறுத்தியது. அதற்கு, இலங்கை அதிபர், தனக்கு வாக்கு அளித்தவர்களுக்கு மட்டும் அல்ல, எனக்கு வாக்கு அளிக்காதவர்கள், இனம், மத அடிப்படையிலான அனைத்துத் தரப்பினருக்கும் நான் அதிபர் ஆவேன். இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் கடமை ஆற்ற நான் உறுதி பூண்டுள்ளேன் என்று தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related posts