ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு மனு

அவதூறு பரப்பியதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கில் நடிகர் சிம்பு மீண்டும் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016-ல் வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்த படத்தில் நடிக்க சிம்புக்கு ரூ. 8 கோடி சம்பளம் பேசப்பட்டு, ரூ.1.51 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது.

இதில் சம்பள பாக்கி ரூ.6.48 கோடியை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதேசமயம், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரக் கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், இணையதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி, மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கு தற்போது தனி அதிகாரிகளை அரசு நியமித்துள்ளதால், விஷால் இந்த வழக்கில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதால், இரு சங்கங்களின் தனி அதிகாரிகளை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டும் என விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி, மனுவில் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்ய சிம்புவுக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related posts