எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித்தை நியமிக்க முடிவு

சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று (05) கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு ஏகமனதாக இதீர்மானத்தை எடுத்துள்ளது.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவை எதிர்க் கட்சித் தலைவராக நியமிப்பதற்கான தனது ஆதரவை வழங்கியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் யார் என பெரும்பான்மை எம்.பிக்களைக் கொண்ட, ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்த சர்ச்சைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு, அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகருக்கு அறிவித்திருந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் 45 பேர் கையொப்பமிட்டு சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தனர்.

ஆயினும் எதிர்க்கட்சி தலைவராக பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய, கட்சியின் பொதுச் செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்ததோடு, அடுத்த பாராளுமன்ற அமர்வில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை அப்பதவி வெற்றிடமாகவே இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஐ.தே.க. எம்.பிக்கள் 57 பேரின் கையொப்பத்துடனான கடிதம் மூலம் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி சபாநாயகருக்கு மற்றுமொரு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில், மிக நீண்ட இழுபறிக்கு பின்னர் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க முடிவு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts