உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 49

தேவ அன்பின் அடையாளங்கள்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.ஈஈ

ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல், நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத்தந்தருளி இவ்வளவாய் அன்புகூர்ந்தார். (புதிய மொழிபெயர்ப்பு: அழிந்துபோகமல் நித்திய வாழ்வை அடையும்படிக்கு) யோவான் 3:16.

தேவ அன்பின் அடையாளங்களை இந்த கிறிஸ்மஸ் காலங்களில் நாம் அறிந்து கொள்வோம். இதனை விளங்கிக் கொள்ளும்படியாக இங்கு நடந்த ஓர் சம்பவத்தை முதலில் விபரிக்கிறேன்.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நண்பனை பார்வையிட சென்றேன். அவருக்கு முழங்காலில் வலி. நடப்பதற்கு முடியாமல் கஸ்டப்படுவார். ஒருநாள் அதனைப் பொறுக்க முடியாமல் வேதனைப்படுவதைப் பார்த்த அவரின் மனைவி கணவனிடம், அப்பா எனது முழங்காலை உங்களுக்கு மாற்றமுடியுமா என கேட்டார்கள். அது தனது இருதயத்திற்கு மிகவும் வேதனையாக இருந்ததாக அந்த கணவர் என்னிடம் கூறினார். அப்பொழுது நான் அந்த கணவன் மனைவியின் அன்பைக் குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அதை விட மேலானதுதான் தேவனின் அன்பு.

தேவனின் அன்பைக்குறித்து இனிவரும் வாரங்களில் அறிந்து கொள்வோம்.

அதிசயமான அன்பு.

தம்முடைய குமாரனை மாமிசத்தின் சாயலாகவும், பாவத்தைப்போக்கும் பலியாகவும் அனுப்பி, மாமிசத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். ரோமர் 8:3

வறியநாடுகளில் நடக்கும் ஓர் சம்பவத்தின் ஊடாக இதனை விளக்க விரும்புகிறேன். ஒரு பட்டணத்தில் உள்ள கிராமத்தை பார்வையிட அதன் முதல் அமைச்சர் தமது சகாக்களுடன் அங்கு சென்றார். அங்கு செல்வதற்கு முன்னர் அவரின் வேலையாட்கள் கிராமத்திற்கு முதலில் சென்று அங்குள்ள ஏழைகளை, பார்ப்பதற்கு வேண்டாதவர்களை அங்கிருந்து கலைத்து விட்டார்கள். துப்பரவற்ற கடைகளை மூடி, குப்பைகளை அகற்றி, அழகானவர்களை அக்கிராமத்தின் வாசலில் நிறுத்தி வைத்தார்கள். சிறிது நேரத்தின் பின்னர் முதல் அமைச்சர் அந்த கிராமத்தின் குறைகளை அறிய வந்தபோது, கிராமத்தவர்கள் ஆச்சரியப்படத்தக்கதாக கிராமம் இருந்ததால், முதல் அமைச்சர் எல்லாம் நல்லது என்று சொல்லிப் போய்விட்டார்.

இதுதான் நமது பரிதாப நிலைமை. நமது மெய்யான நிலையை நாம் முற்றிலும் மறந்து போகிறோம். நமது குப்பைகளை மறைத்துவிட்டு போலியான வேசங்களை தரித்துக் கொள்கிறோம். அந்த அமைச்சரைப்போல, நமது அழுக்குகளை மறந்து பிறரைப்பார்த்து அருவருக்கிறோம். நோயுற்றவர்களைப் பார்த்து உதாசீனம் செய்ககிறோம். துன்பப்படுகிறவர்களை ஏளனம் செய்கிறோம். ஏழைகளை வெறுக்கிறோம். வேதனைப்படும் மக்களை ஆதரிக்க மறுக்கிறோம். இதன் நிமித்தமாக எம்மேல் கரிசனை கொண்டு எம் மத்தியில் வாழும் தேவனையும் அறியாமல் தள்ளிவைத்து விடுகிறோம்.

கிறிஸ்மஸ் என்றதும் இவற்றைக் குறித்த சிந்தனையற்றவர்களாக மிகுந்த ஆராவாரத்துடன் கொண்டாடுகிறோம். ஆனால் நம் தேவனோ, மனுசரால் தள்ளி ஒதுக்கப்பட்டவர்களையும், தாங்கள் பாவிகள் என்று ஒதுங்கி நின்றவர்களையும் தேடிவந்தார். பாவிகளை தள்ளிவிடாமல், தம்மையும் பரிசுத்தர் என்று காட்டிக் கொள்ளாமல் தாமே மாமிசமாகி மனிதனாக தம்மை அடையாளப்படுத்தினார். பாவ உலகத்திற்கு வந்துதித்தும் பாவத்தோடு போராடி, தாமே பாவமில்லாதவராக பாவத்தையே பரிகரித்தார்.

தேவனுக்குப் பிரியமான வாசகர்களே, உலகம் உன்னைத் தள்ளி வைக்கலாம். உனது பாவத்தின் காரணமாக, உனது பாவநிலையை உணராமல் உன்னை சிறுமைப்படுத்தலாம். வீட்டிலும் வீதியிலும் தலைநிமிர்ந்து வாழ முடியாதபடி சிறுமைப்பட்டிருக்கலாம். நத்தார் காலத்தில் ஒதுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள். இயேசுவின் பிறப்பு உனக்குத்தான் என்பதை.

காரணம் நமது தேவனின் அன்பு அதிசயமானது. நீதிமான்கள், யோக்கியர்கள் என்று மார்புதட்டி தம்மைக்காட்டிக் கொள்கிறவர்களுக்காக அவர் வரவில்லை. உன்னுடைய, என்னுடைய, அதாவது மனுக்குலத்தின் பாவத்தைப் போக்கும் பலியாக உலகிற்கு வந்தார். ஆகவே மகிழ்ச்சியுடன் கூடிய துணிவோடு இயேசுவின் பிறப்பைக் கொண்டாடு. அந்த அதிசயமான அன்பு இந்நாளில் இருந்து உன்னை ஆட்கொண்டு வழிநடத்தட்டும்.

அன்பின் இயேசுவே, சிறுமைப்பட்டவர்களைத் தேடிவந்த தெய்வம் நீர் என்று இன்று அறிய உதவினீர். அதற்காக நன்றி. உம்முடைய அதிசயமான அன்பிலே நிலைத்திருக்க உதவி செய்யும் பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்மஸ் சந்தோசம் ஒரு நாளில் அல்ல. ஒரு நபரில் இருந்து வருகிறது.
அவர்தான் இயேசுகிறிஸ்து. உள்ளத்தில் இயேசு பிறக்காதவரை கிறிஸ்மஸ்பண்டிகை அர்த்த மற்றதாக இருக்கும்.

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts