3 மாகாணங்களுக்கு இந்த வாரம் ஆளுநர் நியமனம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர்கள் இவ்வாரம் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் சமசமாஜக் கட்சி தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநராக தான் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேல், ஊவா, சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் ஆகிய ஆறு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடந்த 20ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லை.

வடமாகாண ஆளுனராக யாரை தெரிவுசெய்வதென எழுந்த சிக்கலான நிலைமையால் இன்னமும் குறித்த மூன்று மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பில் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவிடம் வினவிய போது, வடமாகாணத்துக்கான ஆளுநரை நியமிப்பதில் ஏற்பட்ட சிக்கலான நிலைமையால் கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான ஆளுநர் நியமனமும் தாமதமடைந்துள்ளது. கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி என்னையே நியமிக்கவுள்ளார். இந்த வாரம் உறுதியாக வடமாகாணத்துக்கான ஆளுநர் தெரிவுடன் மூவரும் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்வோம் என்றார்.

Related posts