பொங்கலுக்கு பிரபுதேவா படம்

பிரபுதேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்கள் திரைக்கு வந்து இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன. டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். அதே நாளில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படத்தையும் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.

பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் தர்பார் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரபுதேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் பிரபுதேவா போலீஸ் துணை கமிஷனராக வருகிறார்.

கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் மற்றும் மறைந்த டைரக்டர் மகேந்திரன், கு.ஞானசம்பந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.சி.முகில் இயக்கி உள்ளார். சல்மான்கானின் தபாங் 3 படத்தை இயக்கி முடித்துள்ள பிரபுதேவா மீண்டும் அவரை வைத்து ராதே என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சிவா நடித்துள்ள சுமோ படமும் பொங்கலுக்கு வருகிறது. பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த தனுசின் பட்டாஸ் படம் தள்ளிப்போகிறது.

Related posts