கோத்தபய ராஜபக்ச பாகிஸ்தான் செல்கிறார்

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் செல்ல உள்ளார். இதனை இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த வாரம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று கடந்த திங்கள்கிழமை அதிபராகப் பொறுப்பேற்றார்.

புதிய அதிபர் கோத்தபய ராஜகபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று இலங்கை சென்று புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த செய்தியையும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கோத்தபய ராஜபக்சவிடம் தெரிவித்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, வரும் 29-ம் தேதி இரு நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார்.

இதற்கிடையே அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பாகிஸ்தானுக்கு விரைவில் வருகை தர வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சவுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜகபக்ச பாகிஸ்தானுக்கு வர சம்மதித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விரைவில் பாகிஸ்தானுக்கு வருகை தர வேண்டும். அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்தார். அதற்கு இலங்கை அதிபரும் இம்ரான் கான் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் வர சம்மதம் தெரிவித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பாகிஸ்தானுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச செல்லும் தேதிகள் குறித்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக எந்தச் செய்தியையும் தெரிவிக்கவில்லை.

Related posts