சிறிலங்காவில் இடம் பெற்ற இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின் போது நடுநிலைமையாக இருந்த காரணத்தினால் கட்சியின் தற்காலிக தலைவராக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டிருந்தார்.

அதனடிப்படையில் மீண்டும் கட்சியின் தலைமையை முன்னாள் ஜனாதிபதியிடமே ஒப்படைத்தாக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

——–

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

——

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சீன – இலங்கை இடையிலான உறவில் புதிய பரிணாமம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக சீன ஜனாதிபதி சீஜின் பின்ங் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு மக்களும் மேலும் இலாபம் ஈட்டும் வகையில் குறித்த உறவுகளை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி எனவும் தான் உட்பட தன்னுடைய நாட்டு மக்கள் மனதார வாழ்த்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

——

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களுள் 33 பேர் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே இவர்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.

இதில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கிய அநுரகுமார திசாநாயக்கவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ (52.25%) மற்றும் சஜித் பிரேமதாச (41.99%) ஆகிய இருவர் மாத்திரமே 5 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பதிவு செய்யப்பட்ட கட்சியின் சார்ப்பில் போட்டியிடும் நபர் 50,000 ரூபா கட்டுப்பணமும் சுயேட்சை வேட்பாளர்கள் 75,000 ரூபா கட்டுப்பணமும் செலுத்தியிருந்தனர்.

——-

வடக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலில் ஈடுபட நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் களமிறங்கிய இரு பிரதான வேட்பாளர்களும் தங்களது 13 கோரிக்கைகளை நிராகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதாவது ஒன்றை நினைத்தால் செய்து முடிக்க கூடியவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

——-

ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராய நாளை (20) விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லாவிடின் எதிர்க் கட்சியில் பங்காற்றுவதா என்பது குறித்து இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது.

அதேபோல் பாராளுமன்றத்தை கலைப்பது குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் இதன் போது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவுள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் நேற்று (18) கூடி கலந்துரையாடியதுடன் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இளைய தலைமைத்துவத்துவம் ஒன்றின் கீழ் புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதனூடாக எதிர்காலத்தில் செயற்படவேண்டும் என ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

——-

ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தில் மத்திய வங்கியின் நிதி அமைச்சின் செயலாளராக இவர் கடமையாற்றி இருந்தார்.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இறுதிப்போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

——

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ இன்று (19) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.

அதற்கமைய அவர் ஜனாதிபதி செயலகத்தில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்ற உள்ளார்.

புதிய ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ. ஜயசுந்தர தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், புதிய பாதுகாப்புச் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ண தெரிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தனது கடமைகளை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

—–

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றிருப்பது குறித்து தமிழக அரசியல் தலைவர்களினால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களை சாடியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ , இலங்கை தமிழ் மக்களை உணர்வுபூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்கள் சந்தர்ப்பவாத அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து அந்த மக்களின் எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைக்கக் கூடியதாக இயன்றவரை பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமிழகத்தின் சில அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்ததும் இல்லை. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்க பூர்வமான செயற்பாட்டை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை.

எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது பல நாடுகளின் தலைவர்கள், குறிப்பாக இந்திய பிரதமர் உள்ளிட்ட பாரதத்தின் பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

தமிழகத்தில் தமது சுய நல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளவர்களாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிக்கும் மதிமுக வின் பொதுச் செயலாளர் வைகோ , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் , பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அறிக்கைகளை கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறேதும் இல்லை. மக்களை பகடை காய்களாக்கும் , எம்மக்களிடையே பகைமையையும் துவேஷத்தையும் தூண்டிவிடும் தரங்கெட்ட அரசியலைத்தவிர வேறு என்ன ஆக்க பூர்வமான விடயத்தை செய்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு என்னுள் என்னால் தடுக்க முடியவில்லை.

2009 இல் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பிலான பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு , வடக்கு – கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சினேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விடயமாகும்.

அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டதுடன், எம்முடன் சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் , எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது.

எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படை தன்மையுடனும் , நல்லெண்ணத்துடனும் செயற்படும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விடுத்து நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.

—–

Related posts