மஹிந்த அரசாங்க அநீதிகளை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்

மஹிந்த அரசாங்கத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொலை கொள்ளை உள்ளிட்ட துன்பங்களை இல்லாதொழிக்க திறமையுள்ளவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எம்மால் எதுவும் செய்ய முடியாது. எனவே தமிழ் மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஏறக்குறைய 6வருடங்கள் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் இருந்தது.

அந்தக் காலப்பகுதியில் வடக்கு மக்களுக்கு எந்தவித அபிவிருத்தியும் கிடைக்கவில்லை.. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நல்லாட்சி அரசில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரிடம் இருந்த காணிகள் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளன.

நூற்றுக்கு 75வீதமான காணிகளை விடுவித்துள்ளோம். மிகுதியாக உள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

30வருட யுத்தம் இடம்பெற்றிருக்கின்றது. வடக்கில் யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் துன்பங்களை நாம் நன்கு அறிவோம்.

50வருடத்தில்செய்ய முடியாததை 5வருடத்தில் செய்ய முடியாது. எனினும் எமது அரசு அதிகாரத்திற்கு வந்ததன்பின் எங்களால் செய்யக்கூடியதை செய்திருக்கின்றோம். ஆனால், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மக்களுக்கு தீங்குகளையே விளைவித்திருந்தார்கள். அளுத்தகம பிரதேசத்திலும் சிலபிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டன. எமது அரசாங்கம் வடகிழக்கு மக்களின் அபிவிருத்திக்காக நிதியை ஒதுக்கியுள்ளது. குறைபாடுகள் இருக்கலாம். இந்த நாட்டைஇளந் தலைமுறையினருக்கும், திறமை இருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியில் பல்வேறு கட்சியினர் இணைந்துள்ளனர். எனவே மக்கள் சிந்திக்க வேண்டும். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச அவர்களின் புதல்வர் நாமல் ராஜபக்சஆகியோர் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கியிருந்து தமக்கு வாக்களிக்கச் சொல்லி மக்களை கேட்கின்றார்கள்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து மக்கள் முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில் எதிர்காலம் எமது பிள்ளைகளின் எதிர்காலம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் 5வருடங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும்.

வட கிழக்கில் இளைஞர்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். தெற்கிலும் மகிந்த அரசாங்கத்தினால் பல சிங்களவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் அவர்கள் மீண்டும்அதிகாரத்திற்கு வந்தால் சர்வாதிகாரம் தலை தூக்கும். பலர் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

விடுதலைப் புலிகளிடம் சமாதானம் பேசிய போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யுத்தம் செய்யப் போகின்றோம் என கூறியிருந்தார்.அதனால்தான் நாங்களும் யுத்தம் செய்வோம் என கூறியிருந்தோம். ஆனால் எங்களுக்குத் தேவை சமாதானம், ஒற்றுமைதான்.பொது மக்கள் பாதிக்கக் கூடாதென்றே எண்ணியிருந்தோம்.

சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ததும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றார்.

Related posts