தேர்தல் பிரசாரத்துக்கு அதிகம் செலவிட்டவர் யார்?

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் பிரச்சார செலவினங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு நிலையமான தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் கொழும்பில் கடந்த 05ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த விடயத்தை வரலாற்றில் முதல் தடவையாக வெளியிட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளினால் கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திபதி முதல் 31ஆம் திகதி வரையான செலவினங்களை அந்த நிலையம் வெளியிட்டது.

குறித்த காலப் பகுதியில் மாத்திரம் மூன்று பிரதான கட்சிகளும் சுமார் 962 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 574 மில்லியன் ரூபாவை இந்த காலப் பகுதிக்குள் மாத்திரம் செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதேபோன்று சஜித் பிரேமதாச போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 372 மில்லியன் ரூபாவை குறித்த காலப் பகுதியில் மாத்திரம் செலவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுர குமார திஸாநாயக்க போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி இந்த காலப் பகுதியில் 16 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

அச்சு ஊடகம், ஒளிபரப்பு ஊடகம், சமூக ஊடகம் மற்றும் ஏனைய செலவுகள்,கூட்டங்கள், ஊர்வலங்கள், காட்சிப் பொருட்கள், அரச சொத்துகளின் துஷ்பிரயோகச் செலவுகள்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் இந்த செலவீன அறிக்கையை தயாரித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) ஆகியன ஒளிபரப்பு ஊடகத்திற்காகவே அதிகளவிலான செலவினங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒளிபரப்பு ஊடகத்திற்காக 456 மில்லியன் ரூபா செலவினம் செய்துள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 219 மில்லியன் ரூபா செலவினம் செய்துள்ளது.

அதேபோன்று தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) ஒளிபரப்பு ஊடகத்திற்காக 4 மில்லியன் ரூபா செலவினம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கள ரீதியான பிரசாரத்திற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 76 மில்லியன் ரூபா செலவினம் செய்துள்ள அதேவேளை, புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) கள ரீதியான பிரசாரத்திற்கு 85 மில்லியன் ரூபாவை செலவினம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி கள ரீதியான பிரசாரத்திற்காக 11 மில்லியன் ரூபா செலவினம் செய்துள்ளது.

அத்துடன், அச்சு ஊடக பிரசாரத்திற்காக புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 68 மில்லியன் ரூபா செலவினம் செய்துள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அச்சு ஊடகத்திற்காக 42 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) அச்சு ஊடகத்திற்காக ஒரு மில்லியன் ரூபா செலவு செய்துள்ளது.

சமூக ஊடகத்தின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவிலான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணியும் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை குறிப்பிடத்தக்களவு பயன்படுத்தியுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 35 வேட்பாளர்கள் மூன்று பிரதான வேட்பாளர்களின் செலவினங்கள் இவ்வாறு இருக்க, ஏனைய வேட்பாளர்கள் ஒட்டு மொத்தமாக சுமார் 20 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக அந்த நிலையம் கணிப்பீடு செய்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க மற்றும் இந்த தேர்தலில் போட்டியிடும் ஒரேயொரு பெண் வேட்பாளரான அஜந்த பெரேரா ஆகியோர் சுமார் நான்கு மில்லியன் ரூபாவும் தேர்தல் பிரசாரத்திற்காக செலவிட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

ஏனைய வேட்பாளர்கள் மிகவும் சிறியளவிலான தொகையை செலவு செய்தே, தமது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டாபய ராஜபக்ஷ 60 வீதமான செலவினங்களையும், சஜித் பிரேமதாஸ 39 வீதமான செலவினங்களையும், அநுர குமார திஸாநாயக்க ஒரு வீதமான செலவினங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சமூக வலைத்தளங்களில் செலவிடப்பட்ட செலவினங்கள் மற்றும் வானொலிகளில் பிரசாரத்திற்காக செலவிடப்பட்ட செலவினங்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என அந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

எதிர்வரும் சில தினங்களில் முழுமையாக செலவினங்கள் தொடர்பான தகவல்களை திரட்டி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக அந்த நிலையத்தின் இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டார்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் இந்த தேர்தல் காலப் பகுதியில் மாத்திரம் சுமார் 10 பில்லியன் ரூபா செலவீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில், பிரசார நிதியாக்கம் தொடர்பில் சட்டமோ அல்லது கட்டுப்பாட்டு பொறிமுறையோ இல்லை என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் குறிப்பிடுகின்றது. இதன்படி, இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களில் செலவினங்கள் தொடர்பான வரையறையொன்றை வைக்க வேண்டிய வகையில் சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வலியுறுத்துகின்றது.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் இறுதியாக கேள்வியொன்றை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளிடம் தொடுக்கின்றது.இந்த நிதிகளுக்கான மூலங்கள் எவை? என்ற கேள்வியையே தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் தொடுக்கின்றது.

Related posts