புளொட், ரெலோ முடிவை துரிதப்படுத்த வேண்டுகோள்

இலங்கை தமிழரசுக்கட்சி தமது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றின் முடிவுகளை விரைவாக அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் தொலைபேசி மூலம் புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடனும் தொடர்பு கொண்டு பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்ளுக்கு முன்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான தமிழரசுக்கட்சி தமது முடிவை அறிவித்திருந்த நிலையில் ஏனைய கட்சிகள் தமது முடிவை இதுவரை அறிவிக்கவில்லை.

அக் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவொன்றை எட்டுவதற்கான பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் இரா. சம்பந்தனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவர் மேற்படி இரு கட்சிகளுடனும் நேற்று முன்தினமே அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பின்னணியிலேயே நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்படி கட்சிகளின் தலைவர்களிடம் முடிவுகளை விரைவாக அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு கூடிய போது டெலோ மற்றும் புளொட் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருந்தன.

இந்நிலையில் புளொட் கட்சியானது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை அப்போதே மேற்கொண்டிருந்தது.

எவ்வாறெனினும் புளொட் கட்சியின் பொதுச்செயலாளர் அக் கட்சியின் முடிவு தொடர்பில் உறுதியாக எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Related posts