சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது

கோவா சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு விருது வழங்கப்படும் என, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு, நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. 76 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படும் எனவும், 26 இந்திய திரைப்படங்கள் மற்றும் 15 இந்திய ஆவணப்படங்கள் திரையிடப்படும் எனவும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

‘பதாய் ஹோ’, ‘கல்லி பாய்’, ‘உரி’ போன்ற பாலிவுட் திரைப்படங்கள் இத்திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன. மேலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள 12 வெவ்வேறு மொழி திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு இத்திரைப்பட விழாவில் , ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் இன்று (நவ.2) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ ( ICON OF GOLDEN JUBILEE) என்ற விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. இதனை நான் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், தனக்கு விருது வழங்கப்படுவதற்கு ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஜினி தன் ட்விட்டர் பக்கத்தில், “சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழாவில் எனக்கு வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க மரியாதைக்கு இந்திய அரசுக்கு நன்றி,” என பதிவிட்டுள்ளார்.

Related posts