தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படும்

என் மீது உண்மையான நம்பிக்கை வைத்துக்கொள்ளுங்கள்.

என்னைப்பற்றி பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்றுமுன்தினம் (29) மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,பிரதியமைச்சர் வி.முரளிதரன் (கருணாஅம்மான்) , பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், நுவான் ரத்வத்த, வடகிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைப்போம். பாதுகாப்பான நாட்டை ஏற்படுத்தி தருவோம்.

இன்று புத்திஜீவிகள், வர்த்தகர்கள்,துறைசார்ந்த வல்லுந‌ர்கள் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்காலத் திட்டமிடலுடன் தயாரித்துள்ளார்கள். எனது விஞ்ஞாபனத்தை தயாரித்த கிழக்கைச் சேர்ந்தவர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.

இன்றைய இளைஞர், யுவதிகளின் பிரச்சினை எனக்குத் தெரியும். இளைஞர்களையும், யுவதிகளையும் சரியான திட்டமிடலுடன் சவால்மிக்க தொழிநுட்ப யுகத்தில் முறையான தொழிற்பயிற்ச்சிகளையும், திறன்களையும் கொடுத்து அவர்களுக்குரிய அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமையைச் செய்யவேண்டும். உலக பொருளாதாரத்திற்கு ஏற்றவகையில் நவீன, டிஜிட்டல் தொழிநுட்ப பயிற்சிகளை வழங்கி மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட தொழில்வல்லுனர்களை உருவாக்கி ஆறு மாதம் முதல் ஒரு வருடத்தில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்போம்.

இன்று இந்தியாவில் தொழிநுட்ப வளர்ச்சி விரைவாக விருத்தியடைந்து இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது.

நாங்கள் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் விவசாயிகளின் நன்மை கருதி உரமானியம் வழங்கினோம். உணவு பாதுகாப்புடன் விவசாயத்தில் உணவு உற்பத்தியை ஊக்குவித்து நாட்டை முன்னேற்றுவேன். கடந்த காலங்களில் நாட்டின் உணவு உற்பத்திக்காக கடனாக பெற்ற அனைத்து விவசாயிகளின் கடனையும் நாம் ஆட்சிக்கு வந்து இரத்துச் செய்வோம். நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ, பசுமைப்புரட்சிகளை செய்து வறுமைப்பட்ட மக்களின் பட்டினியைப் போக்குவோம்.

கொழும்பை அபிவிருத்தி செய்ததைப்போல் மட்டக்களப்பையும் அபிவிருத்தி செய்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கல்லடிப்பாலம், மண்முனை பாலம், பனிச்சங்கேணிப்பாலம் போன்றவற்றை செய்து காட்டியுள்ளோம்.

சுகாதாரம், கல்வி, குடிநீர், உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்போம்.என்மீது நம்பிக்கை வைத்துக்கொள்ளுங்கள்.

பாதுகாப்பான, அபிவிருத்தியுடன் கூடிய நாட்டை உருவாக்குவதற்கு எங்கள் மீது நம்பிக்ைக வைத்துக்கொள்ளுங்கள். நான் வழங்கிய உறுதிமொழியை ஆட்சிக்கு வந்து செய்துகாட்டுவேன்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

Related posts