தமிழன் ஒருவன் ஜனாதிபதி ஆவது கனவிலும் கூட நடக்காத ஒன்று

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் உங்களுக்கு நாங்கள் வாக்களிக்க தயாரில்லை என்பதை காட்டுவதற்காக தமிழ் தேசிய சிந்தனையுடன் எனக்கு வாக்களியுங்கள். நான் ஒரு குறியீடு மட்டுமே என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

நேற்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், இன்று தபால்மூல வாக்களிப்பு தொடங்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நான் தமிழ் மக்களுக்கு கூற விரும்புவது ஒன்று மட்டுமே. ஒரு தமிழன் இலங்கையில் ஜனாதிபதி ஆவது கனவிலும் கூட நடக்காத ஒன்று. ஆனாலும் கூட நான் எதற்காக தேர்தலில் நிற்கிறேன்? என பலர் கேட்டுள்ளனர், கேட்ககூடும்.

வடக்கில் உள்ள அரசியல் தரப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக பேசினார்கள். ஆனாலும் அந்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்தது. அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். இப்போது நான் ஒரு குறியீடு மட்டுமே. இன்று தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளையும், அடிப்படை கோரிக்கைகளையும் நிராகாித்துள்ள நிலையில் நாங்கள் அவர்களை நிராகரிக்கிறோம் என்பதை சிங்கள தேசத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் காட்டுவதற்கான வரலாற்று வாய்ப்பாக எனக்கு அளிக்கும் வாக்கை நீங்கள் கருதுங்கள்.

தமிழ்தேசிய சிந்தனையுடன் அதற்காக எனக்கு வாக்களியுங்கள். நான் ஒரு குறியீடாக உங்கள் முன்னால் நிற்கிறேன். மேலும் சிவாஜிலிங்கம் தேர்தலில் இருந்து விலகிவிட்டார் என பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபாய ராஜபக்ஷவின் ஆதரவாளா்கள் தங்களுடைய வேட்பாளருக்கும் சிவாஜிலிங்கத்திற்கும் வாக்களியுங்கள் என கூறுகிறாா்கள். இது மக்களை குழப்பும் செயல் என்பதுடன், மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருக்கவேண்டும். 2ம் வாக்கு, 3ம் வாக்கு என்பது பயனற்ற ஒன்று. 1ம் வாக்கை எனக்கு வழங்குங்கள்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி, பிரதமருக்கு வழங்குவதை காட்டிலும் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

விசேடமாக யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு வாகனம், யாழ்.மாநகரசபை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டிகள் பிரச்சார நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது? நாங்கள் கேட்டாலும் அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தருவீர்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Related posts