ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி

2021-ம் ஆண்டு வரை பொறுக்க முடியாமல் பதவி வெறியில் மு.க.ஸ்டாலின் இருப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி இன்று (அக்.17) சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?
ஆடு பகை, குட்டி உறவு என்கிற பேச்சுக்கு இடமில்லை. இது ஏற்கெனவே எடுத்த முடிவு. நடந்து முடிந்தது பற்றி கேட்க வேண்டாம். இப்போது நடப்பதும், வருங்காலமும் முக்கியம். ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி தொடர வேண்டும். கட்சி நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அவசியம் இல்லாதது குறித்து ஏன் விவாதிக்க வேண்டும்.

முதல்வர் தன்னுடன் நேரடியாக போட்டியிடத் தயாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாரே?

எந்த சவாலையும் நாங்கள் எதிர்கொள்ளத் தயார். திமுக தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரையில் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார். அதனால்தான் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பது அவருக்கே தெரியவில்லை. ராஜினாமா செய்யத் தயாரா, போட்டியிடத் தயாரா, பொறுப்பேற்றுக்கொள்ளத் தயாரா என கேள்வியெழுப்புகிறார். 2021-ல் தான் தேர்தல் வருகிறது. அப்போது தெரிந்துவிடும். சிறந்த நீதிபதி மக்கள்தான். மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயத்திற்கு இவர் ஏன் அவசரப்படுகிறார்? 2021-ம் ஆண்டு வருவதற்குள் பொறுக்க முடியாமல், தூங்க முடியாமல் பதவி வெறி அவரைப் பாடாய்ப்படுத்துகிறது.

அதிமுகவுக்கு மீண்டும் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?
கட்சியின் உயர்மட்ட அமைப்பு பொதுக்குழுதான். அதுதான் எல்லாவற்றையும் முடிவு செய்யும்.

அதிமுகவின் ஆரம்பகால உறுப்பினர்கள் பலர் கஷ்டத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு கட்சி உதவி செய்யுமா?
அதனைக் கட்சி முடிவு செய்யும்.

உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவிக்கப்படும்?
உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related posts