வடிவேலுவுக்குப் பதில் யோகி பாபு

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்கப் பூஜை போடப்பட்ட படத்தில், தற்போது யோகி பாபு நடித்து வருகிறார்.

பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சார்லி சாப்ளின் 2’. பல்வேறு காமெடி கதைகளை இயக்கிய ஷக்தி சிதம்பரம் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதற்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்க ‘பேய் மாமா’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார்.

ஆனால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினையால் ஷக்தி சிதம்பரம் படத்தில் வடிவேலுவால் நடிக்க முடியாமல் போனது. தற்போது இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்து, வடிவேலுவுக்கு பல்வேறு இயக்குநர்கள் கதை சொல்லி வருகிறார்கள்.

இதனிடையே, வடிவேலுவுக்காக எழுதிய ‘பேய் மாமா’ கதையை தற்போது யோகி பாபுவை நடிக்க வைத்துப் படமாக்கி வருகிறார் ஷக்தி சிதம்பரம். இதன் படப்பிடிப்பு குமுளியில் நடைபெற்று வருகிறது. ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலர் யோகி பாபுவுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Related posts