மீண்டும் அஜித் – நயன்தாரா ஜோடி?

‘தல 60’ படத்தில் மீண்டும் அஜித் – நயன்தாரா ஜோடி இணைந்து நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் அஜித். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் புதிய படத்தையும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்க, போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.

இதன் கதை விவாதம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, தற்போது நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்தில் மீண்டும் அஜித்துக்கு நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இணை இறுதியாக நடித்த ‘விஸ்வாசம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

அஜித் ரசிகர்கள் இந்தச் செய்தியைக் கொண்டாடி வந்தாலும், படக்குழுவினரோ அமைதி காத்து வருகிறார்கள். இது தொடர்பாக விசாரித்தபோது, “உண்மையில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை. இதர முக்கியக் கதாபாத்திரங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

அதற்குள் நயன்தாரா, ரகுல் ப்ரீத் சிங், ஜான்வி கபூர் என்று தங்களுக்குத் தோன்றும் பெயர்களை எல்லாம் நாயகிகளாக வெளியிட்டு வருகிறார்கள். இதில் எதுவுமே உண்மையில்லை” என்று தெரிவித்தார்கள். மேலும், படப்பூஜை நடைபெறும் அன்று படக்குழுவினர் யாரென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

Related posts