கோட்டாபயவின் கருத்துக்கு தமிழ்த் தலைவர்கள் கண்டனம்

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துகளை தமிழ் தலைவர்கள் கண்டித்துள்ளனர். “சரணடைந்த எவரும் கொல்லப்படவில்லை. சடலங்களை அடையாளம் காண முடியாததால் காணாமல் போனதாக உறவினர்கள் கூறுகிறார்கள்” என கோட்டாபய ராஜபக்ஷ செய்தியாளர்களிடம் கூறியிருப்பதானது எந்த வகையிலும் ஏற்க முடியாதென்றும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயலென்றும் அவர்கள் கூறினர்.

காணாமல்போனோர் சம்பந்தமாக அவர் கூறிய கருத்து, உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகளை ஏளனப்படுத்தும் செயலாகும்.

சடலங்களைக் காணததால் காணாமல்போனோர் பற்றி பேசுகின்றனரென்பது தமிழர்களை இழிவுப்படுத்துவதாக இருக்கின்றதென்றும் தமிழ்த் தலைவர்கள் தெரிவித்தனர். யுத்தகாலத்தில் நடந்தவற்றுக்கு தான் பொறுப்பில்லை, இராணுவத் தளபதிதான் பொறுப்பு என்று கூறிவிட்டு அவர் ஒதுங்க நினைப்பது உலகத்தை ஏமாற்றும் பகிரத முயற்சி என்றும் தமிழ் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தினகரனுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

புளொட் தலைவர் த.சித்தார்த்தன்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய கூறிய கருத்துக்கள் ஏற்க முடியாது. உண்மையில் அவர் அப்படிக் கூற முடியாது. ஏனெனில் யுத்த காலத்தில் முழுக்க முழுக்க யுத்தத்தை நடத்துவதில் யுத்தத்திற்கு பொறுப்பாக அவரும் இருந்தவர். ஆகையினால் அப்படிக் கூறிய கருத்துக்களை நாங்கள் எதிர்க்கிறோம். என்னைப் பொறுத்த வரை அவர் அப்படித் தான் கூறுவார் என்பதுஎதிர்பார்க்கப்பட்ட விடயம். இருந்தாலும் அவருடைய கூற்றை முழுமையாக நாங்கள் நிராகரிக்கிறோம். ஆகவே காணாமல் போனவர்கள் சம்பந்தமான விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பத்திரிகையாளர் மாநாட்டில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவரிடம் கேட்டபொழுது ஏற்கனவே 13 ஆயிரம் விடுதலைப் புலிகள் மறுவாழ்வளிக்ககப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் வேறு எவரும் கைது செய்யப்படவில்லை என்ற வடிவத்திலும் அவர் பதில் சொல்லியிருக்கின்றார்.

ஆனால் அதேசமயம் அவரது தமையனான மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு ஏறத்தாழ 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதுதொடர்பாக அவர் எந்தவிதமான பதிலையும் சொல்லவில்லை என்பதையும் நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

இதனைப் போன்று தமிழ் மக்கள் தொடர்பான கேள்விகளுக்கு அவரிடமிருந்து எந்தவித நியாயபூர்வமான பதில்களும் வரவில்லை. மாறாக இன்னுமொரு கட்டத்தில் அவர் கூறுகின்ற பொழுது இரானுவத்தை வழி நடத்தியது தான் இல்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். மேலும் அது இராணுவத் தளபதி சம்பந்தமான விடயமென்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் முப்படைகளிற்குமான செயலாளராக இவர் தான் இருந்திருக்கின்றார். அது மாத்திரமல்லாமல் கடந்த காலங்களில் பத்திரிகையாளர்களுடன் பேசுகின்ற பொழுது யுத்தம் வெற்றியடைந்ததற்கு தான் தான் காரணமென்றும் அப்போதிருந்த தமது அரசாங்கமும் தான் காரணமென்றும் தமது வழிகாட்டுதலில் தான் யுத்தம் வெற்றியடைந்ததாகவும் பல தடவைகள் கூறியிருக்கிறார்.

ஆனால் இப்பொழுது சிங்கள வாக்குகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டு இராணுவத்தை தான் வழி நடத்தவில்லை என்று கூறுகின்றார்.

ஆகவே முன்னுக்குப் பின் முரணான வகையில் அவரது பதில் அமைந்திருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்கள் தன்னிடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்றதாக தன்னுடைய ஊடக சந்திப்பில் கூறியிருக்கின்றார்.

ஆகவே அவருடைய அப் பதில்கள் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில்கள் அல்ல. நிச்சயமாக அவரது பதிலின் ஊடாக தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதைத் தான் மீண்டும் மீண்டும் கூற முற்படுகின்றார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கோட்டாபயவின் இக் கருத்தை பச்சைப் பொய்யாகவே நாங்கள் பார்க்கிறோம். கொலைகாரன் தன்னுடைய கொலைகளை ஒரு போதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. ஆகையினால் இவரைப் போன்ற தரப்புக்களினால் எங்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது.

அதேநேரம் இந்த விடயங்களில் வெறுமனே கோட்டாபய மற்றும் அவர் சார்ந்த ஒரு கட்சி மட்டும் தான் காரணம் என்று கூறிக் கொண்டிருக்க முடியாது.

ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சியும் அதனையே செய்கின்றது. அத்தோடு அவர்கள் தப்பிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான செயற்பாடுகளைத் தான் முன்னெடுத்து வருகின்றார்கள்.

கடந்த ஐந்து வருடத்திலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் நடைபெற்ற விடயங்களை எடுத்துப் பார்த்தால் அவர்களைப் போன்றதான செயற்பாடுகளையே இவர்களும் முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.

ஆக சிங்களத் தரப்பினர்கள் எண்ணங்கள் சிந்தனைகள் மாறவில்லை. அதுமாறப் போவதும் இல்லை. அதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமல் போனோர் விவகாரம். சரணடைந்தவர்கள் விவகாரம். யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடக்குவதற்கான செயற்பாடுகள் தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே மேற்சொன்ன இந்த விடயங்களை முடக்கி இதனை இல்லாமல் பண்ணுவதுதான் அனைத்து சிங்களத் தரப்புக்களதும் நோக்கமாக உள்ளது. அதனையே அவர்கள் செய்தும் வருகின்றனர். அதற்காகப் பச்சைப் பொய்களையும் சொல்லிவருகின்றனர்.

ஆகவே பொறுப்புக் கூறல் இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் இந்த இரு கட்சிகளதும் வேட்பாளர்களிடத்திலும் எந்தவிதமான நிலைப்பாடுகளும் இல்லை. இதனால் இத் தேர்தலில் தமிழ் மக்களிடம் தெரிவுகளும் இல்லை. அவ்வாறிருக்கையில் ஒரு தரப்பை எதிர்த்து மற்றத் தரப்பிற்கு ஆதரவை வழங்குவதென்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாது.

ரெலோ செயலாளர் நாயகம் என்.சிறிக்காந்தா

இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு குறித்து தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆகையினால் இந்த விடயத்தில் புதிதாகத் தெரிவிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நாங்கள் எங்களுடைய 13 கோரிக்கைகளோடு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களோடும் அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க இருக்கின்றோம்.

இந் நிலையில் அவசரப்பட்டு எந்தக் கருத்தையும் நாங்கள் தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் எங்கள் கோரிக்கைகளிலே இந்த விடயங்களும் அடங்கியிருக்கின்றது. ஆகவே நேரடியாக நாங்கள் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களோடு பேச்சுக்களை நடத்திய பிறகு நாங்கள் ஒரு முடிவிற்கு வருவோம்.

தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கத்தவமுள்ள நாடாக இலங்கை இருக்கிறது. அப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்பது இலங்கையைக் கட்டுப்படுத்தக் கூடியது. ஆகவே அதனை நாங்கள் ஏற்க முடியாது நிராகரிப்போம் என்கின்றதாக கூற முடியாது. அவ்வாறு கூறுவது அல்லது அதனைச் செய்தால் உண்மையில் அந்தத் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமோ அதனை அவர்கள் செய்வார்கள்.

மேலும் யுத்த காலத்தில் நடந்தவற்றுக்கு நான் பொறுப்பில்லை இராணுவத் தளபதிதான் பொறுப்பு என்று எழுந்தமானமாகக் கூற முடியாது. அப்படி நீங்கள் பொறுப்பில்லை என கூற முடியாது அதனை விசாரணை மூலம் நிருபிக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்

மலையக மக்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ கூறும் பொய்களை நம்புவதற்கு நாம் தயாராகவில்லை. பெருந்தோட்டங்களின் அபிவிருத்திக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவால் உருவாக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை இல்லாதொழித்தது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவேயாகும். திடீரென இவர்களுக்கு மலையக மக்கள் குறித்து கரிசனை ஏற்பட்டுள்ளது.

மலைநாட்டு அமைச்சு இல்லாது புதிய கிராமங்களை உருவாக்க முடியாது என்பதை வலியுறுத்தி 2015ஆம் ஆண்டு மீண்டும் நாம் குறித்த அமைச்சை உருவாக்கினோம். அதன் மூலம் இன்று மலையகமெங்கும் புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

குறித்த அமைச்சின் கீழ் எவ்வித நிறுவனங்களும் இருக்கவில்லை. இன்று பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அதிகார சபையொன்றை உருவாக்கியுள்ளோம்.

இதுதான் மாற்றம். ஐ.தே.கவின் ஆட்சிக்காலத்திலேயே இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முடிந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ கூறும் பொய்களை நம்புவதற்கு மலையக மக்கள் தயாரில்லை என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன், பருத்தித்துறை விசேட நிருபர் எஸ். நிதர்சன்

Related posts