புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி ஜோதிகா?

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், இசைகோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

சிவா இயக்கும் படத்தில் அடுத்து நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இது ரஜினிக்கு 168-வது படம்.

ஏற்கனவே கார்த்தியின் சிறுத்தை, அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை சிவா இயக்கி உள்ளார். தற்போது இமயமலையில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் பட வேலைகள் தொடங்க உள்ளன. ரஜினிகாந்த் பிறந்த நாள் டிசம்பர் மாதம் 12-ந்தேதி வருகிறது.

அன்றைய தினம் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தர்பார் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இதில் ஜோதிகா நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும், இதுகுறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். அந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வும் நடக்கிறது. கிராமத்து பின்னணியில் விவசாயிகள் பிரச்சினைகளை மையப்படுத்தி அதிரடி கதையம்சம் உள்ள படமாக தயாராவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தாதாவாக வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

Related posts