தேர்தல் வெற்றி குறித்து மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கிடைத்த வெற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிர்க் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சி கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றி என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 17 தேர்தல் தொகுதிகளிலும் பொதுஜன முன்னணி வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

´கடந்த வருட ஆரம்பத்தில் செய்யப்பட்ட வேட்பு மனு தாக்கலுக்கமைய நடத்தப்பட்ட தேர்தல் இதுவாகும்.

அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தது. எனினும் தற்போது ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க அனைவரும் கூட்டணி ஒன்றை அமைத்து ஒரே சக்தியாக மாறியுள்ளோம்.

ஒட்டுமொத்தமாக எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் எதிர்கட்சி கூட்டமைப்புக்கு 69 வீதமான வாக்குகள் கிடைத்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 24 வீதமான வாக்குகளே கிடைத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணிக்கு வழமையான வாக்குகளே கிடைத்துள்ளன.

அரச அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி, தேர்தல் விதிகளை மீறி, நிலங்களையும், பொருட்களையும் வழங்கி தேர்தலில் வெற்றிப்பெற அரசாங்கம் முயற்சித்தது.

ஆனால் மக்களை ஏமாற்றி தனது அதிகாரத்தை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட விடயங்களை குறிப்பிட தேவையில்லை குறிப்பாக பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. எல்பிட்டிய தேர்தலுக்கு முன்னர் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்ட புதிய தகவல்களுக்கமைய நாட்டில் வேலையின்மை பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி வேகம் எமது ஆட்சி காலத்தை விட மூன்றில் ஒரு பங்காக இன்று குறைந்துள்ளது. வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் வீழ்ச்சியடைந்து நாட்டின் கடன் சுமை உயர்ந்துள்ளது.

இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மேற்கத்தேய அல்லது சர்வதேச காரணங்கள் எதுவும் இல்லை. எமது அண்டை நாடுகளான இந்தியா, பங்களாதேஸ் போன்றவை முன்னேறி வருகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி முற்றிலும் அரசியல் காரணங்களால் ஏற்பட்டது எனவே அதனை சரிப்படுத்த அரசியலால் மாத்திரமே முடியும். எல்பிட்டிய மக்கள் அதனை ஆரம்பித்து வைத்துள்ளனர். நல்லாட்சி பொருளாதாரத்தை மாத்திரம் சீரழிக்கவில்லை மாறாக ஜனாநாயக விழுமியங்களை அவர்கள் இல்லாது செய்தனர்.

மாகாண சபை தேர்தலை எந்த முறையிலும் நடத்த முடியாதவாறு அவர்கள் மூன்று வருடங்களாக பிற்போட்டுள்ளனர். கடந்த வருடத்தில் நடக்க இருந்த பாராளுமன்ற தேர்தலையும் அவர்கள் நீதிமன்றத்தை நாடி நிறுத்தினார்கள். அதேபோல் ஜனாதிபதி தேர்தலையும் பிற்போடுவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

அதற்கும் மேல் அவர்கள் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை பிற்போடவும் முயற்சித்தனர். எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்தல் களத்தில் இருந்து நீக்குவதற்கு அவர்கள் கடும் பிரயத்தனம் எடுத்தனர். ஆகவே இந்த துர்ப்பாக்கிய சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துள்ளது.

அதற்கான முதலாவது எச்சரிக்கை எல்பிட்டியவில் இருந்து விடுக்கப்பட்டது. எனவே எல்பிட்டிய தேர்தல் வெற்றியை அனைத்து எதிர்க்கட்சி கூட்டணியின் உறுப்பினர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts