மதுவுக்கு அடிமையாக இருந்தேன் நடிகை சுருதிஹாசன்

மதுவுக்கு அடிமையாக இருந்தேன் என நடிகை சுருதிஹாசன் கூறி உள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை சுருதிஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்த சுருதிஹாசன், பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.

இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தங்களுக்குள் நிலவிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.

இதையடுத்து சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார் சுருதிஹாசன். இந்நிலையில் காதல் முறிவு குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுருதிஹாசன்,

நான் மிகவும் கூலான நபர். உணர்வுப்பூர்வமானரும் கூட. நல்லவர்கள் நல்ல நேரங்களில் நல்லவர்கள், அதே நபர்கள் சில நேரங்களில் மோசமானவர்கள். ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நான் நிறைய கற்றுக்கொண்டேன், அது ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. இது சினிமா காதல் அல்ல.

ஒரு சிறந்த காதலை தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன். அது என்னைத் தேடி வரும்போது இதற்காகத்தான் காத்திருந்தேன் என உலகத்துக்கு அறிவிக்க காத்திருக்கிறேன்.

ஒரு காலத்தில் நான் விஸ்கிக்கு அடிமையாக இருந்தேன். அதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதனால் தான் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தேன்” என்றார்.

சுருதிஹாசன் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு கட்டமராயுடு என்ற தெலுங்கு படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts