அருணாசலம் செல்வக்கதிரமலை அவர்கள் மரணமடைந்தார்

டென்மார்க் பிலுண்ட் நகரில் வாழ்ந்தவரும், தாயகத்தில் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவருமான அருணாசலம் செல்வக்கதிரமலை அவர்கள் இன்று 08.10.2019 டென்மார்க் பிலுண்ட் நகரில் மரணமடைந்தார்.

டென்மார்க்கில் குடியேறிய நாள் முதல் சமுதாய மேம்பாட்டுக்காக அருந்தொண்டாற்றிய அன்னாரின் பிரிவு தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

தாயகத்தில் மக்கள் படும் துயர் கண்டு நெஞ்சு பொறுக்க முடியாது கலங்கி, அவர்களுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாக அருந்தொண்டாற்றியவர்.

சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையில் முக்கியமான உறுப்பினராக பணியாற்றி சைவமும் தமிழும் மேம்பட தன்னாலான அத்தனை பணிகளையும் மேற்கொண்டவர்.

தமிழ் பாடசாலைகளில் நவராத்திரி விழாக்களை சிறப்பாக நடத்த தொடர்ந்து பணியாற்றியவர், முத்தமிழ் விழாக்கள் டென்மார்க்கில் நடைபெற்ற போது அவற்றோடு இணைந்து செயலாற்றியவர்.

கிறீன்ஸ்ரெல் நகரத்தின் கலாச்சார கலையகத்தில் இவருடைய பங்களிப்பு அளப்பெரியது..

வல்வை மண்ணுக்காக ஆற்றிய தொண்டுகள், கந்தவன கடவை முருகன் மேல் கொண்ட பக்தி என்று நெடிய வரலாற்று நதியாக ஓடியது இவர் பெரு வாழ்வு.

நல்ல கணவனாக, நல்ல மனிதராக, நல்ல தந்தையாக, மருமக்கள் போற்றும் மாமனான அனைத்து வாழ்க்கைப் பாத்திரங்களையும் நல்லபடியாக மேற்கொண்டு விடைபெற்றுள்ளார்.

தனது பிறவியை நல்லபடியாக வாழ்ந்து இறையடி சேர்ந்துள்ளார்.

தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்தாலும் தனது வாழ்வை வெற்றி வாழ்வாக மாற்றிய இவர் வரலாறு இன்றைய தலை முறையினர் நினைந்து போற்ற வேண்டிய புத்தகமாகும்.

அன்னாரின் பிரிவு ஈடு செய்ய முடியாதது..

இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் வெளிவரும்.

அலைகள் 08.10.2019

Related posts