இளையராஜாவுடன் மோதலா? டைரக்டர் சீனுராமசாமி விளக்கம்

விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படத்தை சீனுராமசாமி இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இசையமைக்கின்றனர்.

பாடல்களை வைரமுத்துவை வைத்து எழுத வைக்க சீனுராமசாமி விரும்பியதாகவும் இளையராஜா தரப்பில் அதை ஏற்காததால் இருவருக்கும் மோதல் என்றும் தகவல்கள் பரவின.

இதற்கு விளக்கம் அளித்து சீனுராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நான் இயக்கும் மாமனிதன் படத்தில் இளையராஜா பாடல்களுக்கு மெட்டு போடுகிறார். யுவன் இசைகோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா? படத்தில் பாடல்கள் என்று வந்தபோது பழனிபாரதிக்கும், ஏகாதசிக்கும் கொடுக்கலாம் என்றேன்.

யுவன் தரப்பில் பா.விஜய் என்றார்கள். நான் சம்மதித்தேன். இது நான், யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணிபுரியும் 4-வது படம் இளையராஜாவுடன் முதல் படம். இளையராஜா மீது எனக்கிருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணை புரத்தில் கதாநாயகன் வாழும் ஊராக படம் பிடித்து இருக்கிறேன்.

இதில் எனது பெயரை வைத்து இளையராஜாவை சிறுமைப்படுத்த வேண்டாம். என்மீது அவருக்கு கோபம் இருப்பதாக கூறுவது பொய். நானும், யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் 4 படங்களில் பணிபுரிந்தோம். தர்மதுரையில் வைரமுத்து பாடல் வரிகளுக்கு தேசிய விருது கிடைத்தது.” இவ்வாறு சீனுராமசாமி கூறியுள்ளார்.

Related posts