ஒன்றிணைந்த ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச நேற்று (26) கட்சியின் செயற்குழுவிலும் பாராளுமன்றக் குழுவிலும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று மாலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கூடிய போதே அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சி செயற்குழு உறுப்பினர்கள், பாராளுமன்றக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரேரித்தார்.

இந்தப் பிரேரணைக்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதால் அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பதவி வகிப்பதற்கும், பிரதமராக செயற்படுவதற்கும் இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கட்சியின் செயற்குழுவும், பாராளுமன்றக் குழுவும் ஒன்றாகக் கூடியது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தெளிவுபடுத்தியதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரைப் பிரேரித்தார். வேறு வேட்பாளர்களின் பெயர்கள் முன்வைக்கப்படாததால் சஜித் பிரேமதாஸவின் பெயர் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தத் தெரிவு தொடர்பாக கட்சியின் தவிசாளர் கபீர் ஹஷீம், பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் சிறிக்கொத்தவில் நடத்திய விசேட ஊடக மாநாட்டில் இந்த முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

இங்கு மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

முதலாவது ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பது (இதற்கு ஏகமனதான அங்கீகாரம் கிடைத்தது இரண்டாவதாக கட்சியின் தலைவராக தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தொடர்வது அதேபோன்று அரசாங்கத்தின் பிரதமர் பதவியிலும் அவரே தொடர்வாரெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஒரே வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை வெற்றி கொள்ளச் செய்வதற்கு கட்சியின் சகல மட்டத்திலும் ஒற்றுமையாக கிராமிய மட்டத்திலிருந்து மக்களாதரவை திரட்டும் பணியை இன்று முதல் ஆரம்பிக்க முடிவு செய்திருப்பதாக செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து அமைப்பாளர்கள், கட்சியுடன் இணைந்துள்ள பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கட்சியின் விசேட மாநாடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி வேட்பாளரும், பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவும் முக்கிய உரையாற்றவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அக்டோபர் மாதம் 10ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு காலி முகத்திடலில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்டமான முதலாவது பிரசாரக் கூட்டத்தில் நாடு பூராவும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் அணிதிரள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக ரீதியில், கட்சி யாப்புக்கமைய நேர்மையான தீர்மானத்தை எடுத்துள்ளார். கடந்த காலத்தில் கட்சியை எவ்வாறு தலைநிமிறச் செய்தாரோ அதே பாணியில் இன்னும் கட்சி சீர்குலையாமல், சின்னாபின்னமடையாமல் பாதுகாத்துள்ளார். இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் அங்கம் வகிக்கும் அனைவரும் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சி, பங்காளிக் கட்சிகளுடன் கூடிய ஐக்கிய தேசிய முன்னணி அடுத்துவரும் நாட்களில் அமைக்கப்படவிருக்கும் ஜனநாயக தேசிய கூட்டணி உட்பட அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு அனைவரையும் அரவைணைத்துக் கொண்டு இந்தத் தேர்தலை நாம் நிச்சயம் வெற்றி கொள்வோம் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் தவிசாளர் கபீர் ஹாஷிம், சிறிது காலமாக நாம் கோழித் தூக்கத்தில் இருந்தும் இன்றும் அந்த கோழித் துக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு விட்டோம். இந்த இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சின்னாபின்னப்பட்டு உடையும் என சிலர் கனவு கண்டனர் அவர்களது கனவு தொடர்ந்தும் கனவாகவே போகும்.

இன்று புதுத் தெம்புடன், புதிய மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம். முழு நாட்டு மக்களும் கேட்ட வேட்பாளரை பிரதமர் அறிவித்துவிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி, எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட தலைவராவார். இன்று மீண்டுமொரு தடவை அதனை நிரூபித்துவிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி குடும்ப ஆட்சிக்காக வேட்பாளரை நிறுத்தும் கட்சியல்ல, மக்கள் கேட்கும் வேபாளரையே எமது கட்சி அறிவித்துள்ளது. 2010 ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமித்த வேளையிலும் 2014ல் மைத்திரிபால சிறிசேனவை நியமித்த சந்தர்ப்பத்திலும் கடைபிடித்த ஜனநாயக பண்பையே இன்று மீண்டும் பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார் எனத் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

Related posts