பொன் ராம் – சசிகுமார் இணையும் எம்.ஜி.ஆர். மகன்

பொன் ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் படத்துக்கு ‘எம்.ஜி.ஆர். மகன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சீமராஜா’. 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் பொன் ராம்.

அந்தக் கதையில் நடிக்க சசிகுமார் சம்மதம் தெரிவித்தவுடன், முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று (செப்டம்பர் 25) படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘எம்.ஜி.ஆர். மகன்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக களமிறங்குகிறார் மிருணாளினி ரவி.

இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி தாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர்.

Related posts