யுத்தம் முடிந்தும் நிம்மதியில்லை; அரசுகள் தலைகுனிய வேண்டும்

வடக்கில் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடுகின்றனர். அதேபோல தென்னிலங்கையில் போரில் முன்னின்று போராடி அங்கவீனமான இராணுவத்தினர் ஓய்வூதியம் வழங்கவில்லை என போராடுகின்றனர்.

அப்படியானால் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னர் ஆட்சி நடத்திய அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டும். அவர்களால் நாட்டு மக்களை நிம்மதியாக வாழ வைக்க முடியாது என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஜே.வி.பி கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டினை ஆண்டு வரும் ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் மதவாதத்தையும் இனவாதத்தையும் வளர்த்து வருகின்றனர். கடந்த 2009 ஆண்டு உள்நாட்டு போர் முடிவடைந்தது. அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டினை ஆட்சி செய்தார்.அப்போது வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு யாரும் போராட முன்வரவில்லை. எமது கட்சியினரே முதன்முதலில் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என போராட்டம் நடாத்தப்பட்டது.அப்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் அடியாட்களினால் எமது கட்சியின் செயற்பாட்டாளர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் இடம்பெற்றது.

போர் முடிவுக்கு வந்து ஒரு தசாப்த காலமாகியும் இந்த நாட்டினைக் கட்டியெழுப்ப முடியவில்லை. அதற்கு காரணம் ஊழல். மஹிந்த ஆட்சியில் ஊழல் நடந்தால் அதனை ஐக்கிய தேசியக் கட்சி ரணில் அரசு காப்பாற்றும், ரணில் ஆட்சியில் ஊழல் நடந்தால் மஹிந்த அரசு ரணிலை காப்பாற்றும். இவ்வாறு ஊழல்வாதிகளே நாட்டினை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். தற்போதைய அரசு மஹிந்த காலத்தில் நடைபெற்ற ஊழல் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அது வெறும் கண்துடைப்பு மட்டுமே. மஹிந்த காலத்து ஊழல்களுக்கு போதிய ஆதாரங்கள் ரணிலிடம் இருந்தும் அவர்கள் மஹிந்தவையும் அவரது குடும்பத்தையும் காப்பாற்றி வருகின்றனர்.

இனிவரும் காலங்களில் மஹிந்த குடும்பம் ஆட்சிக்கு வந்தால் கூட ரணிலின் ஆட்சியில் நடைபெற்ற மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. இவ்வாறான ஊழல் வாதிகளை மக்கள் ஒதுக்கி புதிய மக்கள் ஆட்சி ஒன்றை அமைக்க எமது கட்சிக்கு ஆதரவினை தர வேண்டும். தற்போதைய அரசு வெறுமனே கட்டடங்களை கட்டி வருகின்றது அதன் ஊடாக அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது. அனைத்து துறையிலும் முன்னேற்றத்தை கொண்டு வரவேண்டும்.மஹிந்த, ரணில், மைத்திரி தரப்புக்கள் நாட்டு மக்கள் மத்தியில் இனவாதத்தையும், மத வாதத்தையும் பரப்பி வருகின்றனர். இவர்களுக்கு இவை இல்லாது விட்டால் அரசியல் இல்லை. ஆனால் நாம் அப்படியல்ல.

ஆட்சியாளர்கள் வடக்கு மக்களுக்கும் எதனையும் செய்யவில்லை தெற்கு மக்களுக்கும் எதனையும் செய்யவில்லை. மாறாக ஊழல்களை தான் செய்தது. இவ்வாறானவர்கள் அரசியலில் இருப்பதற்கு வெட்கித் தலை குனிய வேண்டும். மக்கள் இவர்களை ஒதுக்க வேண்டும் என்றார்.

Related posts