நாட்டை விட்டுச் சென்ற கல்விமான்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

கல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறை ஒன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்கான முன்மொழிவு ஒன்றினை புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாக இலங்கை பொறியியல் சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (17) கொழும்பு, நீர்ப்பாசன திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

பொறியியலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் நாட்டை விட்டுச்செல்லுதல் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய சவாலாகும் என்பதை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுதந்திரமான ஜனநாயக நாடு என்ற வகையில் எந்தவொரு நபருக்கும் எவ்வித எல்லைகளும் விதிக்கப்படவில்லை ஆயினும் நாட்டுக்கான தமது பொறுப்பினை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் அவற்றைத் தீர்த்து குறுகிய காலத்திற்காவது தமது தாய் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்ற வேண்டியது கல்விமான்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை பொறியியல் சபை மற்றும் பொறியியல் சபையின் உத்தியோகபூர்வ அலுவலகம் ஆகியன ஜனாதிபதியால் இதன்போது உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

இலங்கை பொறியியல் மற்றும் தொழிநுட்பத் துறைகளில் முறையான வழிகாட்டுதலுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனக் கட்டமைப்பு ஒன்று காணப்பாடாத குறையினை நிவர்த்திக்கும் வகையிலும் நாட்டின் அபிவிருத்தி பயணத்திற்கு பாரிய சக்தியாகவும் 35 வருட நீண்டகால முயற்சியின் பயனாகவே இலங்கை பொறியியல் சபை நிறுவப்பட்டுள்ளது.

இதனூடாக எதிர்பார்க்கப்படும் நாட்டினதும் மக்களினதும் நன்மைக்கான செயற்பாடுகள் நிறைவேற வேண்டும் என ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 17 ஆம் திகதியை இலங்கையில் பொறியியல் தினமாக இதன்போது ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டது.

கடந்த காலம் முதல் தற்போது வரையிலும் எதிர்காலத்திலும் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டில் பெரும் பங்காற்றும் அனைத்து இலங்கை பொறியியலாளர்களுக்கும் நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இலங்கை பொறியியல் சபையின் முதலாவது உத்தியோகபூர்வ அலுவலகத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

அத்துடன் இலங்கை பொறியியல் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

இலங்கை பொறியியல் சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், இலங்கை பொறியியல் நிறுவனத்தின் தலைவர் பொறியியல் பேராசிரியர் ரீ.எம். பல்லேவத்த, இலங்கை கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ.டி.ஆர். சந்திரசிறி, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தயந்த எஸ். விஜேசேகர ஆகியோருக்கு இலங்கை பொறியியல் சபையினால் வழங்கப்பட்ட சான்றிதழ்களை ஜனாதிபதி வழங்கினார்.

இதன்போது ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது.

அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீ. ஹரிசன், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

Related posts