உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 37

வாழ்க்கையை வழமாக்கும் தேவன்.
சகோதரன். புpரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர், ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர், ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். தானியேல் 2:22

நம் கர்த்தர் நமக்காக எல்லாவற்றையும் மாற்றுகிறவர். ஆனால் அவரோ மாறாதவர். அவருடைய அன்பு மாறாதது. தயவு மாறாதது. கிருபை மாறாதது. காருணியம் மாறாதது. மனதுருக்கம் மாறாதது. அதனால் தேவன் தன்னைக் குறித்து இவ்வாறு கூறுகிறார். நான் கர்த்தர், நான் மாறாதவர், ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் (தேவனண்டை வருகிற மக்கள் அழிவைக் காண்கிறதில்லை) நிர்மூலமாகவில்லை. மல்கியா 3:6.

இயேசுக்கிறிஸ்த்துவும் நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனாக இருக்கிறார். எபிரேயர் 13:8.

நம் கர்த்தர் எப்படிப்பட்டவர்? அவர் மாறாதவராக இருந்தாலும் சகலற்றையும் மாற்றுகிறவர். மாற்றிப்போடுகிறவர். தமது வார்த்தைக்கு கீழ்படிந்து வாழ்கையை ஒப்புக்கொடுத்து வாழும் மக்களுக்காகவும், தன்னை நோக்கி ஜெபங்களை ஏறெடுக்கும் மக்களின் வேண்டுதல்கள் மூலம் சகலற்றையும் மாற்றிப்போடுகிறவர்.

வேதம்சொல்கிறது, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான், பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17 தேவன் பழையதை புதிதாக மாற்றுகிறவர். அவர் கோணலானவைகளை செவ்வையாக மாற்றுகிறவர்.

எல்லா மாற்றத்திலும் மிகப்பெரிய மாற்றம், ஒருவன் கிறிஸ்துவுக்குள் வரும்போது அவன் உள்ளத்தில் ஏற்படும் அல்லது, அடைந்து கொள்ளும் மாற்றந்தான். முதலில் பழைய பாவதோசம் நீங்கி, மறைந்து இரட்சிப்பின் சந்தோசம் உண்டாகிறது. பழைய சாவங்கள் நீங்கி ஆசீர்வாதங்கள் உண்டாகிறது. பழைய சிறையிருப்புக்கள் மாறி விடுதலை உண்டாகிறது. மக்களின் துக்கம் சந்தோசமாக மாறுகிறது.

இன்று அநேகமானவர்கள் தங்களின் வாழ்க்கையில் மாற்றம் வருவதற்காக குடுகுடுப்பைக்காரரையும், மந்திரவாதிகளையும், ஜோசியர்களையும் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். குடுகுடுப்பை அடித்து ஐயாவிற்கு நல்லகாலம் பிறந்திருக்கு, நல்ல காலம் பிறந்திருக்கு என்று சொல்லமாட்டார்களா என ஏங்கும் மக்களை நாம் காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் தை பிறந்தால் வழிபிறக்காத எனவும் ஏங்குகிறார்கள்.

இன்னும் சிலர் தங்களின் வாழ்க்கையில் மாற்றம் காணவிரும்பி அரசியல் வாதிகளையும், மந்திரிகளையும் நம்பியிருப்பார்கள். ஆனால் கர்த்தரை நம்பியிருப்பது மிகப்பெரிய மாற்றத்தையும், ஆசீர்வாதத்தையும் கொண்டுவரும் என்பதை அறியயாமல் வாழ்வது எவ்வளவு வேதனை க்குரியது.

தேவனை அறிந்து, எம்மை அவரிடம் ஒப்புக்கொடுப்பதனால் வரும் நன்மைகளைப் பற்றி தியானிப்போம்.
துக்கத்தை மாற்றுகிறவர்.

இயேசு சொன்னார், மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். யோவான் 16:20. வேதத்தில் பல சம்பவங்களை நாம் காணலாம். 400 வருடங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் மக்களை; 40 வருடங்கள் எகிப்தை விட்டு வெளியேறி வனாந்தரத்திலே நடந்தார்கள்.ஒருநாள் தேவன் அவர்களை பாலுந்தேனும் ஓடும் கானான் தேசத்திற்கு கொண்டுவந்தார். அவர்கள் கட்டாதவீடுகளையும் நடாத திராட்சைத்தோட்டங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள். இன்று ஐரோப்பாவில்வாழும் இலங்கைத் தமிழர்களாகிய எம்மை நினைக்கவும். அவர்களுடைய துக்கம் சந்தோசமாக மாறினது.

வனாந்திரத்திற்கு அப்பால் பாலும் தேனும் ஓடும் கானான் உண்டென்பதை ஒரு நாளும் மறவாதே. உனது துயரமான வாழ்விற்குப் பின்னால் தேவனின் ஆறுதலும் ஆசீர்வாதமும் உண்டென்பதை ஒருநாளும் மறவாதே.

புலம்பலை மாற்றுகிறவர்.
சங்கீதம் 30:11 இவ்வாறு சொல்கிறது. என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப் பண்ணினீர், என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக்களைந்து போட்டு (துக்கத்தை நீக்கி), மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.

ஒருநாள் நகோமி என்ற பெண் தனது வேதனைகளினிமித்தம் இவ்வாறு தேவனிடத்தில் முறையிட்டாள். கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள். ரூத் 1:13. அவள் தேவசமூகத்தை விட்டு வெளியே இருந்தபோது இவ்வாறு நடந்தது. அவள் மீண்டும் பெத்லேகேமுக்கு வந்தபோது, தேவனைத்தேடி வந்தபோது கர்த்தர் கிருபையாக அவளுடைய வாழ்க்கையை கட்டியெழுப்பினார். அவளின் புலம்பல் ஆனந்தக் களிப்பாக மாறியது.

சிறையிருப்பை மாற்றுகிறவர்.

இயேசு இவ்வுலகத்திற்கு வந்ததன் நோக்கம் என்ன? கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்@ சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்@ இருதயம் நொறுங்குண்ட வர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த் தருடைய அநுக்கிரக வருஷத்தையும் ( தேவனிடத்தில் இருந்து நன்மையைக் கண்டுகொள்ளும் வேளையை அறிவிக்கவும்), நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும்கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார். நாம் இயேசுவிடம் எனது வேதனையை, துன்பத்தை மாற்றும் என்று அவரை அழைக்கும் போது அவர் நமது கதறலைக்கேட்டு நமது வாழ்க்கையை மாற்றி ஆசீர்வதிப்பார்.

சாபத்தை மாற்றுகிறவர்.

இயேசு சிலுவை மரணம்வரை தம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்தது நீங்களும் நானும் தேவ சாபத்திலிருந்து விடுதலைபெற்று வாழ வேண்டும் என்பதற்காக. இதை நாம் ஏசாயா 53:4-5 இல் காணலாம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை (தேவனுடன் உறவை) உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

காரணம் சாபங்கள் நீங்கி விடுதலை பெறும்போது மட்டுந்தான் தேவனுடன் வாழ முடியும் என்பதற்காக.
தேவனுக்குப் பிரியமான மக்களே, இப்போது புரிந்திருப்பீர்கள் தேவனின் தன்மையையும், அவரின் இருதயத்தின் நோக்கத்தையும். அவரின் இருதயத்தின் வாஞ்சை உங்களில் நிறைவேற உன்னை ஒப்புக்கொடுக்கிறாயா? அப்படியானால் இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து தேவனிடம் ஒப்புக்கொடு.

அன்பும் இரக்கமும் உள்ள நல்ல தகப்பனே, இந்த வேளையை நீர் எனக்குத் தந்தற்காக நன்றி அப்பா. உமது இருதயத்தின் வாஞ்சையையும் நோக்கத்தையும் அலைகள் பத்திரிகையில் இந்த சிந்தனையின் மூலம் கற்றுணர்ந்து கொள்ள உதவிநீரெ, அதற்கு எனது நன்றிகள். எனது வாழ்வின் சகல காரியங்களில் இருந்தும் உமது நாமத்தினால் ஆறுதலையும், மாற்றத்தையும் கண்டுகொள்ள உதவி செய்வீராக. உமது பிள்ளையாக என்னைமாற்றி காத்துநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Related posts