பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்?

தபாங் 3’ படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கும் அடுத்த படத்திலும் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பிரபுதேவா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சிங் இஸ் பிளிங்’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தி மொழியில் வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது.

அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய பிரபுதேவா, இயக்கத்துக்கு ஓய்வு கொடுத்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 10 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது மறுபடியும் இயக்கத்தைக் கையில் எடுத்துள்ள பிரபுதேவா, சல்மான் கான் நடிப்பில் ‘தபாங் 3’ படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் உருவாகிவரும் இந்தப் படத்தில், சுதீப், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வருகிற டிசம்பர் மாதம் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் 2 இந்திப் படங்களை பிரபுதேவா இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், ஒரு படத்தில் மறுபடியும் சல்மான் கானே ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள். இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்ப் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸாக உள்ளன. முதற்கட்டமாக ‘எங் மங் சங்’ படக்குழுவினரை மும்பைக்கு வரவழைத்து, தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் பிரபுதேவா.
‘பொன் மாணிக்கவேல்’, ‘தேள்’ ஆகிய படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Related posts