சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரண நிதியாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிவாரணத் தொகையை, தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை இன்று நடைபெற்றது. சென்னை பள்ளிக்கரணையில் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த சுபஸ்ரீ தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக, வழக்கறிஞர் லட்சுமிநாராயணன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக, காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி, மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். இதையடுத்து விசாரணை தொடங்கிய நிலையில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

நீதிபதிகள் சரமாரி கேள்வி:

* பேனர் விழுந்து சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது மோதிய லாரி ஓட்டுநர் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது?

* சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்தது யார் என்று தெரியுமா?

* நேற்று வைக்கப்பட்ட பேனரில் அச்சகம் பெயர், அனுமதி வழங்கப்பட்ட விவரங்கள் எங்கே?

* திமுகவினர் பேனர் வைக்க கூடாது என்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நகலை வழக்கறிஞர் கண்ணதாசன் நீதிபதிகளிடம் வழங்கினார். அதற்கு, ஆளுங்கட்சி என்ன செய்தது? என கேள்வி எழுப்பினார்.

அதிமுக தரப்பு பதில்: பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளதாக அரசு வக்கீல் ராஜகோபால் பதிலளித்தார்.

* திருமணம், காதுகுத்து, கிடாவெட்டுதலுக்கு பேனர் வைப்பதை எப்படி தடுக்க போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் விவாகரத்து தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

தமிழக அரசு பதில்: மாநகராட்சியில் போதுமான ஆட்கள் இல்லை என்று பேனர் வழக்கில் தமிழக அரசு வாதம் செய்தது.

* சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உதவியோடு சட்டவிரோத பேனர்களை கண்காணிக்க முடியாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

* சட்டவிரோதமாக பேனர் வைத்தவர்கள் மீது இதுவரை எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

* உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகளை சென்னை மாநகராட்சி சஸ்பெண்ட் செய்துள்ளதா?

தமிழக அரசு பதில்: இனிமேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் ஐகோர்ட் நீதிபதிகளிடம் உறுதியளித்தார். சட்டவிரோதமாக பேனர் வைத்ததை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

* சுபஸ்ரீ குடும்பத்திற்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கப்போகிறீர்கள் என கல்வி எழுப்பிய நீதிபதிகள் நஷ்ட ஈட்டை விதிமீறல்களை காத்துக்கொள்ளாத அதிகாரிகள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யலாம் என உத்தரவிட்டனர்.

காவல் ஆய்வாளரிடம் நீதிபதிகள் கேள்வி:

சென்னையின் பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்தது குறித்து காவல் ஆய்வாளரிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பகல் 2.30 மணிக்கு நடந்த விபத்து பற்றி இரவி 8 மணிக்கு வழக்குப்பதிவு செய்தது ஏன்? என கேட்டனர். மேலும் பேனர் வைக்க போலீசிடம் முன் அனுமதி பெறப்பட்டதா? என்றும் சரமாரி கேள்வி எழுப்பினர். பேனரில் இடம் பெற்றிருந்த வண்ணம் (அதிமுக) உங்களை தடுத்ததா? நீதிமன்ற உத்தரவுகள் அரசு வழக்கறிஞர்களைத் தவிர வேறு யாருக்கு தெரியும்? எனவும் கேள்வி எழுப்பினர்.

வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:

* பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு அரசு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

* இடைக்கால நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். அதனை, சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகளிடம் இருந்து நிவாரணத் தொகையை அரசு வசூலிக்க வேண்டும்.

* சட்டவிரோத பேனரை தடுக்க தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யுமாறும் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

* பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தது பற்றிய காவல்துறை விசாரணையை காவல் ஆணையர் கண்காணிக்க உத்தரவு.

* பேனர் விவகாரத்தில் விதிமீறல்களை கண்காணிக்காத அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Related posts