தர்பார் திரைப்படம் பொங்கல் அன்று வெளியீடு

தர்பார் திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்து உள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் ‘தர்பார்’ படம் உருவாகி வருகிறது. இதன் 3வது கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் படத்தை அடுத்து ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்கத்திலேயே தர்பார் என்ற தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துதான் படக்குழு ஷூட்டிங்கை தொடங்கியது.

இதனை அடுத்து ஷூட்டிங்கில் இருந்து ரஜினியின் பல புகைப்படங்கள் கசிந்து கொண்டே இருந்தன. இதனால் படக்குழு இரண்டு நல்ல புகைப்படங்களை வெளியிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்குங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்தது. இதன்படி, இன்று மாலை ஆறு மணிக்கு நடிகர் ரஜினியின் “தர்பார்” படத்தின் 2-வது லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டது.

இந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் படம் சிறப்புடன் வந்துள்ளது. தர்பார் திரைப்படம் பொங்கலன்று திரைக்கு வரும் என்று கூறினார்.

Related posts