யாழ்.மீசாலையில் சொகுசு பேருந்துடன் மோதுண்டு இளைஞர் பலி!

யாழ்.சாவகச்சேரி - ஏ 9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிளில் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே பலியாகியுள்ளார். சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மக்களின் எதிர்ப்பினையும் மீறி மின் காற்றாலை

தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு உட்ப்பட்ட மறவன்புலவு விவசாய கிராமத்தின் எல்லைப் பகுதியில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி மின் காற்றாலை அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் இடம்பெற்று வருகிறது.இத் திட்டம் தமது பகுதியில் அமைக்க வேண்டாம் என கடந்த இரண்டு வருடங்களாக மக்க எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனாலும் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என இம் மக்களுக்கு பல தரப்புக்களாலும் வாக்குறுதி அளிக்கப்பட்டு வேலைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் மீண்டும் இடை நிறுத்தப்பட்டிருந்த வேலைகள் மீண்டும் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமையினால், இம் மக்கள் நேற்று மாலை ஒன்று கூடிய மக்கள். ஊர்வலமாகச் சென்று ஆரம்பிக்கப்பட்ட வேலைகளை நிறுத்தி உடனடியாக வெளியேறுமாறு கோசங்களை எழுப்பினர்.