12 பாடல்களுடன் உருவாகும் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக வைரமுத்து 12 பாடல்கள் எழுதவுள்ளார்.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். த்ரிஷாவையும் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்தவொரு விவரத்தையுமே படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இந்தப் படத்துக்காக 12 பாடல்களை எழுதவுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் காலத்தில் உள்ள வார்த்தைகளை இந்தக் காலத்தில் உள்ள மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாளன்று தான் படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

Related posts