இது ஒரு பொன்மாலைப் பொழுது ராஜசேகர் காலமானார்

தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக 81ல் வெளிவந்த ‘பாலைவனச் சோலை’யைத் தந்த இயக்குநர் ராஜசேகர் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 59.

இயக்குநர் பாரதிராஜாவால் ‘நிழல்கள்’ திரைப்படத்தின்மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் ராஜசேகர். இப்படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார்.

கவிஞர் வைரமுதத்துவின் ரசிகர்களால் கொண்டாடப்படும் முதல் தமிழ் திரையிசைப் பாடலான ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட திரைப்படத்தில் ராஜசேகர் நடித்திருப்பார். இதுவே இவருக்கு ஒரு அடையாளமானது.

பின்னர் திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டியவர் இயக்குநர் ராபர்ட்டுடன் இணைந்து ‘பாலைவன ரோஜக்கள்’ திரைப்படத்தை 1981ல் இயக்கினார்.

தமிழில் ‘சின்னப் பூவே மெல்லப் பேசு’ (1987), ‘பறவைகள் பலவிதம்’ (1988), உள்ளிட்ட சிறந்த வெற்றிப் படங்களை இவர் ராபர்ட்டுடன் இணைந்து இயக்கினார். சினிமாவில் மீண்டும் நடிகராக வலம் வந்த ராஜசேகர் சின்னத்திரை ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

அப்பா வகை கதாபாத்திரங்களில் மிகப் பொருத்தமான அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. சமீபத்திய தொடரான சரவணன் மீனாட்சியிலும் இவரது பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி இயக்குநர் ராஜசேகர் இன்று காலமானார்.

தமிழ்த் திரைப்பட உலகைச் சேர்ந்தவர்களும் சின்னத்திரைக் கலைஞர்களும் இயக்குநர் ராஜசேகருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related posts