பன்னிரண்டு கட்சிகள் போட்டியிடப்போவதாக ஆணையருக்கு அறிவிப்பு

2 அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த தீர்மானித்துள்ளதாக தனக்கு அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று மாலை தெரிவித்தார்.

இந்த 12 அரசியல் கட்சிகளில் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுதவிர இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக தனக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த எழுத்து மூல ஆவணங்களை பெற்றுக் கொண்ட போதும், வேட்புமனுவுக்குரிய காலம் அறிவிக்கப்பட்டதன் பின்னரே அவற்றுக்குரிய விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்படும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அரசியல் கட்சிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டு கோள்களுக்கிணங்கவே 12 அரசியல் கட்சிகளும் தமக்கு அறிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.செப். 15 விசேட அறிவிப்பு

இதேவேளை, உலக ஜனநாயக தினமான செப்டம்பர் 15 ஆம் திகதி முக்கியமான அறிவித்தலொன்றை வெளியிடவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் இடம்பெறவிருக்கின்றது. இக்கூட்டம் வாராந்தக் குழுக் கூட்டமாக உள்ளபோதும் ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கி யுள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இது அமையலாம் என இவர் தெரிவித்தார்.

இக்குழுக்கூட்டத்தின் போது பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக் கோரும் திகதியும், தேர்தல் நடத்தப்படக்கூடிய திகதியும் தீர்மானிக்கப்படலாம். எவ்வாறாக இருந்தபோதும் ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பு இம்மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னரே இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

15ஆம் திகதி வெளியிடவிருக்கும் அறிக்கை ஜனாதிபதி தேர்தலோடு தொடர்புபட்ட அறிக்கையல்ல. ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையாகுமென அவர் கூறினார். எந்தவொரு தேர்தல் குறித்தும் வேட்புமனு திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தக்கூடாது. கூட்டங்கள் தேர்தலோடு தொடர்புபட்ட விடயங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அந்த அறிவிப்பு அமையும் எனக் கூறினார்.

எம்.ஏ.எம். நிலாம்

Related posts