தமிழக பா.ஜ.க. தலைவர் ரஜினிகாந்தா? திடீர் பரபரப்பு

தமிழக பா.ஜ.க. தலைவராக ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் எப்போது என்பது யாருக்கும் தெரியாத புதிராக உள்ளது. அவரது ரசிகர்களும் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், “மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையை மனதார வரவேற்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித் ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜூனன் போன்றவர்கள்” என்று பாராட்டி பேசியிருந்தார்.

இதனால் பா.ஜ.க. அரசு மீதான ஆதரவு நிலைப்பாட்டில் ரஜினிகாந்த் வெளிப்படையாக இருப்பது தெரிவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே ரஜினிகாந்த் புது கட்சி தொடங்குவாரா?, அல்லது பா.ஜ.க.வில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்று கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது. மூத்த தலைவர்களில் சிலர் இந்த பதவியை பெறுவதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, தமிழக பா.ஜ.க. தலைவராக நடிகர் ரஜினிகாந்தை நியமித்தால் எப்படி இருக்கும்? என்று டெல்லியில் உள்ள பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்கள் மறைவுக்கு பிறகு, எப்படியும் தமிழகத்தில் காலூன்றிவிட வேண்டும் என்று பா.ஜ.க. தீவிரமாக இருக்கிறது.

அதன் அடிப்படையிலேயே ரஜினிகாந்தை தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுத்துவருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடமும் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பேசியிருப்பதாக தெரிகிறது. “பா.ஜ.க. தமிழக தலைமை பொறுப்பை ஏற்க நீங்கள் வாருங்கள். உங்களுடன் வரும் நிர்வாகிகளுக்கு தேவையான மரியாதையை நாங்கள் கொடுக்கிறோம்” என்றும் ரஜினிகாந்திடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts