தமிழகத்தில் தொழில் தொடங்க 16 அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம்

பிரிட்டன் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நியூயார்க் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தலைமையேற்றார். மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ள கேட்டர்பில்லர், ஃபோர்ட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு தமிழகத்தில் தங்கள் நிறுவனங்களுக்கு கிடைத்த சிறப்பான அனுபவத்தை எடுத்துக் கூறினர். மின்சார வாகனம், வானூர்தி, விண்கல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உகந்த மாநிலம் தமிழகம் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த மாநிலம் தமிழகம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக காட்சித் தொகுப்பு திரையிடப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜீன் மார்ட்டின், அகியுல் சிஸ்டம்ஸ் , சிட்டஸ் பார்ம், ஜோகோ ஹெல்த் , எமர்சன் உள்ளிட்ட 16 நிறுவனங்களுடன் தமிழகத்தில் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 20,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, இளைஞர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ், நாப்தா கிராக்கர் ஆகிய இரு நிறுவனங்கள் தமிழகத்தில் உற்பத்தி ஆலை அமைக்க கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அங்கு சிறப்புரையாற்றிய அவர், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் “யாதும் ஊரே” எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் அதற்கான வலைதளத்தை தொடங்கி வைத்தார். 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள யாதும் ஊரே சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்புகள் ஏற்படுத்தி முதலீட்டு தூதுவர்களை உருவாக்கி தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்களது ஆலோசனைகளை பெறவும் உதவும்.

Related posts