தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் : கோட்டாபய

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்று (31) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வழக்கறிஞர்களின் ஒன்றுகூடலில் கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.

இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், இலங்கை பொதுஜன பெரமுன வழக்கறிஞர்கள், சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றுவர்கள், விசேட விருந்தினர் ஊடக பிரதிநிதிகள், இந்த ஒன்றுகூடல் பார்வையாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வந்தனங்கள்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அது சார்ந்த குழுக்களின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் 5 வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் முன்மொழியப்பட்டதன் பின் முதல் தடவையாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையான சட்டத்துறை சார்ந்த நிபுணர்களை சந்திக்கின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் எனது சில எண்ணங்களை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

சட்டத்துறை சார்ந்த இந்த தொழில் நமது நாட்டிலே உயர்ந்த அந்தஸ்தில் வைத்து மதிக்கப்படும் தொழில்களில் முக்கியமானது அதுமட்டுமல்லாது நீண்ட வரலாறும் கொண்டது.

சட்டத்துறையின் அடிப்படையை தேடிப் பார்க்கப்போனால் அது பண்டைய கிரேக்கத்தில் ஆரம்பித்து சட்டரீதியான தொழிலாக பண்டைய ரோமாபுரியிலிருந்து ஐரோப்பா மற்றும் உலகின் இதர பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. 1830 ஆம் ஆண்டளவில் இலங்கையில் சட்டத்துறை தொழிலானது முறையாக கட்டமைக்கப்பட்ட தொழிலாக அதனுடைய பாரம்பரியங்களுடன் தொழில் தரநிலைகளுடன் ஆரம்பித்தது.

சட்டத்தை படிப்பதும், சட்டத்தை செயல்படுத்துவதும், அதனை வளர்ப்பதும் மற்றும் சட்டத்தைப் பாதுகாப்பதும் சட்ட வல்லுநர்களின் பிரதான கடமையாகும்.

நாகரிக சமூகத்தின் அத்திவாரங்களில் மிக முக்கியமானது சட்டமாகும், அவ்வாறான சட்டத்தை சரியான முறையில் செயற்படுத்தி உறுதி செய்வதற்காக எங்களிடம் ஒரு வலுவான சட்ட அமைப்பு இருப்பது கட்டாயமாகும்.

வலுவான சட்ட அமைப்புடைய ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு சட்டவாட்சி என்பது மிக முக்கியமான அம்சம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

வரையறுக்கப்பட்ட கட்டமைப்பிற்குட்பட்ட ஜனநாயக ஆட்சியின் மூலமே சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த முடியும் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்.

மக்களின் நல்வாழ்வையும் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்த ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சி என்பனவற்றின் கொள்கைகள் எல்லா நேரத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. ஆசியாவிலேயே சர்வசன வாக்குரிமையை பெற்ற முதல் நாடு இதுவாகும்.

1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் இலங்கைக்கு சர்வசன வாக்குரிமை கிடைத்தது. இது தற்போதுள்ள வளர்ச்சியடைந்த பல நாடுகளில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முன்னரே நடைபெற்றதாகும்.

உலகில் உள்ள பல குடியரசுகள் முடி ஆட்சியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு மாறுவதற்கு இந்த சர்வசன வாக்குரிமை காரணியாக உள்ளது. சர்வசன வாக்குரிமையின் மூலமே மக்களுக்கு இறையாண்மை வழங்கப்படுகின்றது.

நாம் இன்னும் நமது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத் தன்மையின் மேல் நம்பிக்கை வைத்து இருந்த போதும், சட்டம் ஆட்சியைப் பாதுகாக்க ஒப்படைக்கப்பட்ட சில நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் அண்மைய நடவடிக்கைகளை பார்க்கும்போது சில கேள்விகள் எழுவதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆயிரக்கணக்கான நமது நாட்டுப் பிரஜைகளின் வாழ்க்கையை பாதிக்கும் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது தங்களது அரசியல் எதிரிகளுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதற்கு முயற்சிப்பது நீதியை நிலைநாட்ட பொறுப்பு வழங்கப்பட்ட நிறுவனங்களின் அரசியல் மயமாக்கம் மீதான சந்தேகத்தைவகுக்கின்றது .

ஒரு பிரபலமான பழமொழி உள்ளது ´தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்´. சட்டத் துறையில் ஏற்படும் தாமதமானது மக்களின் வாழ்வை பாதிக்கும் பாரிய பிரச்சினையாக இந்நாட்களில் உள்ளது.

இந்த தாமதங்களுக்கு எதிராக போராடும் உட்கட்டமைப்பில் மேம்பாடுகளை ஏற்படுத்த போராடும் அதே வேளையில், தொன்மையான சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் நடைமுறைகளை திருத்துவதற்கும், நாட்டின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ற சட்ட அமைப்புகளை உருவாக்குவதற்கும் உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

எங்கள் நீதிமன்ற அறைகள் பல இன்று பாழடைந்த நிலையில் உள்ளன. விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த கட்டிடங்கள் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாததாக இருக்கும். இந்தச் சூழலில்தான், 2014 ஆம் ஆண்டில் முந்தைய அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட நீதிமன்ற அமைப்பின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நம்புகிறோம். இந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பிற நகரங்களிலும் உங்களது தொழிலை உரிய கண்ணியத்துடனும் எளிதாகவும் கடைப்பிடிக்க முடியும் என்பதை உறுதி செய்யும்.

நீதியை விரைவாக வழங்க தற்போதைய நீதிமன்றங்கள் உடைய எண்ணிக்கையும் நீதிபதிகள் உடைய எண்ணிக்கையும் போதுமா என்பதை நாங்கள் ஆராய வேண்டும்.

சட்டத் தீர்ப்புகளின் தாமதங்களைத் தடுக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை நாங்கள் தேட வேண்டும். உட்கட்டமைப்பை உருவாக்குதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் சட்டவாட்சியை நிலைநிறுத்துவதற்கு பொறுப்பான சில நிறுவனங்களை மறுசீரமைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

நாட்டின் தேசிய அபிவிருத்தியில் முன்னெடுத்து வைக்கும் வகையில் சட்டத் தேவைகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நீதிமன்ற அறைகளில் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயன்படுத்துவதை போல இலங்கையிலும் படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படுவது எந்தவொரு வழக்கறிஞரும் விரும்பும் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றாகும் என்பதை நான் அறிவேன். இந்த மரியாதைக்குரிய பதவியின் கௌரவத்தைப் பாதுகாக்க நமது நாட்டின் தலைவர்கள் வரலாற்று ரீதியாக பாடுபட்டிருந்தாலும், சமீப காலங்களில் இந்த பதவிக்குரிய சில நியமனங்கள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

எதிர்காலத்தில், ஜனாதிபதி சட்டத்தரணி பதவிக்கு நியமனங்களை நிர்வகிக்க ஒரு வெளிப்படையான, கடுமையான நடைமுறையை ஏற்படுத்துவதற்காக பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், சட்ட வல்லுநர்கள் மற்றும் பார் அசோசியேசன் ஆகியோரின் ஆலோசனையைப் பெற நான் எதிர்பார்க்கின்றேன்.

இலங்கையின் விரைவான வளர்ச்சியைக் காண நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றீர்கள் என்று நான் நம்புகிறேன்.

மக்கள் எதிர்பார்க்கும் வளமான தேசத்தை கட்டியெழுப்புவதில் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய வளர்ச்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

தேசிய பாதுகாப்பு குறித்த எந்தவொரு விவாதத்திற்கும் சட்டத்தின் ஆட்சி முக்கியமானது. ஒரு தேசத்திற்குள் ஒரு சட்ட அமைப்பு மட்டுமே செயல்பட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்த வேண்டும்.

குடிமக்கள் எப்போதுமே சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்றாலும், அதை ஆதரிக்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு அஞ்சினால் அது சிக்கலுக்கு உரியது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு ஒப்படைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களும் அதற்கு உட்பட்டவர்கள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். சட்டம் அவர்களுக்கு பயமோ தயவோ இல்லாமல் சமமான முறையில் பொருந்த வேண்டும்.

அரசாங்கத்தின் சில உயர் அதிகாரிகள் சமீப காலங்களில் சட்டத்தை வளைத்துள்ளதை நாங்கள் ஊடகங்களில் கண்டோம், இதன் மூலம் சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும் என்ற மேக்சிமின் மேலாதிக்கத்தை சவால் செய்கிறது.

அதனால் தான் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த துயர தாக்குதல்கள் குறித்து சுயாதீன விசாரணையை கோரியுள்ளோம். இது நிறுவப்படாவிட்டால், அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த சில நபர்கள் நீதியிலிருந்து தப்பிக்கக்கூடும் என்று நாங்கள் முன்கூட்டியே எதிர்பார்க்கிறோம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதரவு எங்களுக்கு தேவை.

முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய நாடுகளைத் தேர்ந்தெடுக்கும்போது,நாட்டிற்குள் சட்டத்தின் திறமையான செயல்பாடு அவர்கள் பார்க்கும் முதல் விஷயங்களில் ஒன்றாகும். நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்ட அமைப்பின் செயல்திறன் குறித்து அவர்கள் குறிப்பாக கவனம் செலுத்துகின்றனர். நாட்டின் சட்டங்கள் சர்வதேச சட்டத்துடன் ஒத்துப்போகின்றனவா என்பதையும் அவர்கள் ஆராய்கின்றனர்.

ஆகவே, இலங்கையில் சட்ட மோதல்களை விரைவாக தீர்ப்பதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவதை சட்ட அறிஞர்கள் கவனிக்க வேண்டும், இதில் மத்தியஸ்தம் மற்றும் சமரசம் போன்ற விரைவான மற்றும் திறமையான நடவடிக்கைகள் அடங்கும். சிங்கப்பூர் இன்று மத்தியஸ்தத்திற்கான மையமாக உலகளாவிய நற்பெயரை நிறுவியதைப் போலவே, இலங்கையும் எதிர்காலத்தில் சட்டத் துறையில் பல்வேறு சிறப்புகளுக்கு ஒரு நற்பெயரை நிலைநாட்ட வேண்டும்.

சட்டம் ஒரு வாழும் முறையாகும். சமூகத்தில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப அது மாற வேண்டும். அதனால்தான், சட்டபூர்வமான தொழில் மிக உயர்ந்த தரத்தை எப்போதும் பெறுகின்றது என்பதனால் தான் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொடர்ச்சியான சட்டக்கல்வி ஆனது, முதன்மையான கருவியாக கொள்ளப்படுகின்றது. இதற்கான வசதிகளும் தேவையான மேம்பாடுகளும் ஆலோசிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும்.

ஆசிய பிராந்தியமானது இன்றைய உலகப் பொருளாதாரத்தில் சக்திவாய்ந்த முறையில் வளர்ந்து வரும் ஒன்றாகும். இந்த போக்கை நாம் அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும். நமது ஏற்றுமதி பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும். எங்கள் தனித்துவமான புவிசார் மூலோபாய நிலையை நாம் பயன்படுத்த வேண்டும். இவை அனைத்திலும், சர்வதேச சட்டத்தைப் பற்றிய முழுமையான புரிதலை நாம் வளர்க்க வேண்டும். இந்தச் சூழலில், சட்ட வல்லுநர்களாகிய நீங்கள் சம்பந்தப்பட்ட பாடங்களில் உங்கள் அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பது உங்கள் பொறுப்பாகும் என்று நான் நம்புகிறேன்.

அரசியலமைப்பு சீர்திருத்தம், தொன்மையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை நவீனமயமாக்குதல், தேர்தல் சீர்திருத்தம் ஆகியவற்றிற்கு எதிர்காலத்தில் சட்ட வல்லுநர்களின் சேவைகளை நாங்கள் . பெற எதிர்பார்த்துள்ளோம் இதற்காக பல்வேறு துறைகளில் உள்ள சட்ட அறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் ஆதரவைப்பெற்று நாங்கள் பணியாற்றுவோம்.

முன்னேற்றத்திற்கான எங்கள் தேடலில் முடிந்தவரை புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நாங்கள் எண்ணியிருக்கின்றோம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஒருவரின் தொழிலின் மதிப்பைப் பராமரிக்க புதிய உலகளாவிய தொழில்நுட்ப போக்குகளைப் பயன்படுத்த அடையாளம் கண்டு ஒவ்வொரு முயற்சியையும் செய்ய வேண்டியது அவசியம் என்று இஸ்ரேலின் முன்னாள் தலைமை நீதிபதியான, கௌரவ. ஆரோன் பராக் குறிப்பிட்டுள்ளார்.

எமது எதிர்கால அரசாங்கம் எப்பொழுதும் ஜனநாயகத்தை மதிப்பதோடு அதனை ஆதரிப்பதோடு மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் என்பதையும் நான் முன்மொழிகின்றேன்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் கடைசி கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த பிரபலமான தவறான கதை உள்ளது. எவ்வாறாயினும், இந்த பொய்யான கதை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் நம்முடைய வலுவான அர்ப்பணிப்பிலிருந்து எழுந்த வெற்றியைப் பின்தொடர்வதில் உள்ள பல தாமதங்களை அப்பட்டமாக புறக்கணிக்கிறது.

கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி போருக்கு விரைவான தீர்வைப்பெற எங்களுக்கு சாத்தியம் இருந்தபோதிலும், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அதற்கு பதிலாக, இலகுவான ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தி வெற்றியைத் தொடர நாங்கள் தேர்வுசெய்தோம், இதன் விளைவாக ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். போரின் கடைசி கட்டங்களில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்த எல்.ரி.ரி.ஈ யால் ஏறக்குறைய 300,000 அப்பாவி தமிழ் பொதுமக்கள் சிக்கியதால் இந்த மூலோபாயம் பின்பற்றப்பட்டது. அவர்களை ஆபத்திலிருந்து மீட்பது எங்கள் முதன்மை நோக்கமாக இருந்தது. மனித உரிமைகள் என்ற தலைப்பில் நம்மைத் தாக்க முற்படுபவர்களால் இது வெளிப்படையாக மறைக்கப்படுகிறது . யுத்தத்தின் பின்னர் 11,000 க்கும் மேற்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் மீண்டும் இணைக்கப்பட்டனர் என்பதும் உண்மை.

ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகனின் மிக அடிப்படையான உரிமை வாக்களிக்கும் உரிமை. இந்த ஜனநாயக உரிமை நமது எதிர்கால நிர்வாகத்தின் கீழ் பலப்படுத்தப்படும். தனிநபரின் வாக்குகளின் ஒருமைப்பாட்டை, பொது பார்வையின் சக்தியை உண்மையிலேயே மதிக்கும் ஒரு நிர்வாக முறையை உருவாக்குவதாக நாங்கள் வாக்குறுயளிக்கின்றோம், மேலும் சட்டத்தின் ஆட்சியை வெறுமனே வாய்ச்சொல்லில் செய்வதற்கு பதிலாக உண்மையிலேயே செயல்படுத்துவோம்.

மக்களின் அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பில் உறுதியாக உள்ளன. மக்களின் பொறுப்புகளும் தெளிவாக உள்ளன. அனைவருடைய உரிமையும் மதிக்கப்படும் ஒரு சமூகத்திலேயே சுதந்திரமாக வாழும் உரிமை கிடைக்கும். மரியாதைக்குரிய, ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை வளர்ப்பது நம் அனைவரதும் ஒரு அபிலாசை.

இந்த கனவை நனவாக்குவதற்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்க நான் தயாராக உள்ளேன் என்று உறுதியளிக்கிறேன், அவ்வாறு செய்வதற்கு உங்கள் ஆதரவை தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

உங்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் அமைய வேண்டுமென வாழ்த்தி முடிக்கிறேன். நன்றி.

Related posts