உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 32

மனித வாழ்வும் தேவனின் தருணமும்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

ப10மியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது. பிரசங்கி 11:2

வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஒருசிலர் அது இன்பமானது என்று கூறுவார்கள். பெரும்பாலானோர் இன்றைய சூழநிலைகளை முன்வைத்து அது ஆபத்தானது, பாதுகாப்பற்றது, பொய்யானது என சொல்லக்கூடும். இன்னும் சிலர் நாளாந்த வாழ்க்கைச் செலவினங்களின் அழுத்தத்தால் இதுவும் வாழ்க்கையா என கேட்கட்கூடும். ஒரு உண்மையை நாம் மறுக்க முடியாது. இன்றைய இன்பம் நாளை துன்பமாகலாம். சூழ்நிலைகளும் மாறிப்போகலாம். ஆனால் இறைவன் நமக்குத்தந்த வாழ்வின் தன்மை, அதன் நோக்கம் தார்ப்பரியம் ஒரு நாளும் தேவனிற்குள் மாறாது.

இந்த வேதப்பகுதியை எமுதிய இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலோமூன் வாழ்க்கையை ஓர் வித்தியாசமான கோணத்தில் புரியவைக்கிறார். அதுதான் வாழ்க்கையின் உண்மையான நிலைமை. இந்த 11ம் அதிகாரத்தில் முதற்பகுதியில் வாழ்க்கை என்பது சவால்களும் அபாயங்களும் நிறைந்ததாக மாத்திரம் அல்ல, தருணங்களும் நிறைந்ததாக உள்ளது என விபரிக்கிறார். இன்று அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று யாராவது அறிய முடியுமா?

நாம் வாழும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தருணம். அதை நாம் நழுவ விடக்கூடாது. இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே. அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்? பிர.8:7 ஆகவே வரக்கூடிய சங்கடங்களை கணக்கிட்டுக் கொண்டிராமல் நமக்கு அருளப்பட்டுள்ள நல்ல தருணங்களை இனங்கண்டு நடக்க முன்வர வேண்டும். இதனை கீழ்வரும் வேதப்பகுதி நன்றாக நமக்கு விளக்குகிறது.

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு. அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு. ப10மியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது. மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் ப10மியின்மேல் பொழியும், மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும். காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான். மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.

ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறது போலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய். காலையிலே உன் விதையை விதை. மாலையிலே உன் கையை நெகிழவிடாதே. அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே. பிர. 11:1:6.

போடு என்றால் எறிந்து விடு என்று அர்த்தம். எறிந்து விடுதல் என்றால் இரண்டு கருத்தை இங்கு அது வெளிப்படுத்துகிறது.உதாரணமாக சலவைத் தொழிலாளி யிடம் துனிகளை கொடுக்கும் போது அவற்றை அலட்சியமாக எறிந்து விடுவோமா? இல்லை. மாறாக அவற்றை திரும்ப பெறும் நோக்கில் கவனமாக கொடுத்து ஒரு பற்றுச்சீடுடைப் பெறுவோம். காரணம் குறிக்கப்பட்ட நாட்களுக்குப்பின்னர் துனிகள் திரும்பிவரும் என நமக்குத்தெரியும். அதேநேரம் தூண்டில் போடுகிறவனும், தேர்தலுக்கு ஓட்டு போடுகிறவனும் இதே மனநிலையில் போடமுடியுமா? இங்கு எறிந்து விடுவது பலன் தருமா என்ற கேள்வியாகிவிடுகிறது.

இதே போன்றதுதான் தேவன் எமக்குத்தரும் தருணங்கள். இவற்றை நாம் தட்டிக்களிக்காமல் பிரயோசனப்படுத்த முன்வர வேண்டும். விவசாயியின் வாழ்க்கை யில் இருந்து மிகப்பெரிய உதாரணத்தை நாம் கற்றுக்கொள்ள முடியும். காற்று எழும்ப வேண்டும், மழை பெய்ய வேண்டும் என்று காத்திருக்காமல் உரிய காலத்தில் வயலில் வேலை செய்ய முற்படுவார்கள். காரணம் காலத்தை பயன்படுத்த வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். எதற்கும் ஒரு திட்டவட்டமான கால நேரத்தை நாம் குறித்து வைக்க முடியாதவாறு இன்று இயற்கை மாறியுள்ளதை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஆகவே கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து நாம் செய்து கொண்டிருக்க வேண்டியதை செய்ய வேண்டும்.

நாம் தற்செயலாக பிறந்தவர்கள் அல்ல. தேவனால் ஒரு நோக்கத்தோடு உருவாக்கப்பட்டவர்கள். இப்படியாக நம்மை உருவாக்கியவர் நம்மை உருவாக்கு முன்னர் நம்மை முழுமையாக அறிந்தவராக இருக்கிறார் என்ற உண்மை நமக்கு எத்தனை ஆச்சரியமும் ஆறுதலான செய்தியுமாயிருக்கிறது. ஏரேமியா 1:5. தினம் தினம் நாம் தேவனுடைய வழியில் நடப்பதற்கு இந்த ஒரு உண்மையே போதும்.

அத்துடன் தேவனுடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தேவன் ஒரு நோக்கம் வைத்துள்ளார் என்ற உண்மையை நாம் சிந்தித்துப் பார்ப்போமானால், அந்த சிந்தனை, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திக்கத் தூண்டும். அவ்வாறு சிந்தித்தால் நம்மில்பலர் நம்மைக் குறித்தே வெட்கப்பட வேண்டியிருக்கும். ஏனெனில் தேவன் நம்மில் கொண்டிருக்கும் நோக்கத்திற்கு நேர்மாறாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மை நமக்கே தெரியவரும். அப்பொழுது நாம் என்ன செய்யப்போகிறோம்?

அன்பான அலைகள் நேயர்களே, நீங்களும் குழம்பியிருக்கிறீர்களா? தேவனை நம்பக்கூடிய வழியில் காரியங்கள் இல்லை என்றும், அதேசமயம் அவரை நம்பாமலும் இருக்க முடியாத சூழ்நிலையா? ஒருபுறம் விசுவாசம். மறுபுறம் அவவிசுவாசம் – நம்பமுடியாதநிலை. குழப்பம் வரட்டும். ஏனெனில் அதுதான் தெளிவைத்தரும். மனதில் குழப்பம் வரும்போதெல்லாம் இயேசு தரும் விடுதலையை நினைத்துப்பார். அந்த நினைவே உனக்கு வெற்றியைத் தரும்.

எல்லாம் மாயை என்று எழுதிய சாலோமூன் இறுதியில் தேவனுக்கு பயந்து நடப்பது ஒன்றே மனிதனை வாழவைக்கும் என்று எழுதுகிறார். பின்னர் நமக்கு போராட்டம் எதற்கு? அவவிசுவாசம் எதற்கு? ஏன் இரண்டு நினைவுகள்? எல்லாமே பாதகமாக தோன்றினாலும் அவற்றுக்கூடாக எல்லாவற்றையும் நன்மையாக மாற்றும் தேவனின் கரத்தையும், அவரின் தருணத்தையும் நோக்கிப்பார்க்க பழகுவோமானால் அதுவே நமக்குக்கிடைக்கும் வெற்றியும் நல்ல தருணமும் ஆகும். அந்த தருணத்தை வாழ்வில் கண்டுகொள்ள இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து தேவனிடம் ஒப்புக்கொடு.

அன்பின் பரலோக பிதாவே, மானிடவாழ்வில் உமது தருணங்களைப்பற்றியும் அதனால் மனுக்குலம் அடையும் நன்மைபற்றியும் அறிய உதவியதற்காக உமக்கு நன்றி அப்பா. நான் உம்மில் விசுவாசம் வைக்கமுடியாமல் இருக்கும் சகல காரியங்களையும் என்முன் இருந்து அகற்றி, உம்மை அறிந்து விசுவாசம் வைத்து நடக்க உதவி செய்து என்னைக்காத்து வழிநடத்தும் படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் நல்லபிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts