தீபாவளிக்குப் போட்டியின்றி ‘பிகில்’?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்துடன் தீபாவளிக்கு எந்தவொரு படமும் வெளியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதில் விஜய் தன் படப்பிடிப்பு பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்த மாதத்துக்குள் அந்தப் பணிகளையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படம் தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. தீபாவளி என்பதால் போட்டிக்கு வேறு ஏதாவது ஒரு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் ‘பட்டாஸ்’ மற்றும் ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இவ்விரண்டு படங்களுமே பின்வாங்கியதாகத் தெரிகிறது.
இது குறித்து விசாரித்த போது, “’பிகில்’ படத்தின் தமிழக உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் கைப்பற்றிவிட்டது. தற்போது ஏரியா உரிமைகளின் விற்பனையைத் தொடங்கிவிட்டது. இதில் அந்த ஏரியாவில் இருக்கும் முன்னணி விநியோகஸ்தர்கள் கைப்பற்ற பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

முன்னணி விநியோகஸ்தர்கள் கைப்பற்றும் போது, முக்கியமான திரையரங்குகள் அனைத்துமே ‘பிகில்’ படத்துக்குப் போய்விடும். அப்படியிருக்கும் இதர படங்களுக்கு நல்ல திரையரங்குகள் கிடைக்காது. அப்படியிருக்கும் போது வசூல் பாதிக்கும். ஆகையால் ‘பட்டாஸ்’ மற்றும் ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்கள் வெளியாக வாய்ப்பில்லை” என்று தெரிவித்தனர். இதனால் ‘பிகில்’ படம் போட்டியின்றி வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடலை மட்டும் ‘பிகில்’ படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது. செப்டம்பரில் டீஸரை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related posts