‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்

இந்தியன் 2′ படத்தில் மிக முக்கியமான ஃப்ளாஷ்பேக் காட்சிகளைப் பிரம்மாண்டமாகப் படமாக்கவுள்ளார் ஷங்கர். படத்தில் சமுத்திரக்கனியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் கமல் – ஷங்கர் இணைப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிப்பில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு என்பதே தெரியாமல் இருந்தது.

தற்போது சுபாஷ்கரன் – ஷங்கர் இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் அனைத்துமே சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தற்போது சித்தார்த் – ரகுல் ப்ரீத் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு.

இதனிடையே இந்தப் படத்தில் முக்கியமான ஃப்ளாஷ்பேக் காட்சிகளை வைத்திருக்கிறார் ஷங்கர். இதனைப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கவுள்ளனர். இதில் கமல் இளம் வயது உடையவராக நடிக்கவுள்ளார். இதில் பணிகள் அதிகம் என்பதால் கமலை வைத்துப் படமாக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது.

மேலும், மிக முக்கியக் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ச்சியாகப் படங்கள் இயக்கம், தயாரிப்பு என்றிருந்தாலும் தமிழ் – தெலுங்கு மொழிகளில் உருவாகும் மிக முக்கியமான படங்களிலும் கனி நடித்து வருகிறார்.

தமிழில் ‘இந்தியன் 2’, தெலுங்கில் ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் த்ரிவிக்ரம் சீனிவாஸ் – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. இதனிடையே ‘நாடோடிகள் 2’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை இயக்கவும் ஆயத்தமாகி வருகிறார்.

சுமார் 200 கோடி ரூபாய் செலவில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போதைக்கு ஏப்ரல் 2021-ல் ‘இந்தியன் 2’ படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

Related posts