உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 33

கடவுள் பேரில் நம்பிக்கையும் ஆறுதலும்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ? சங்கீதம் 56: 13

கடந்த சிலமாதங்களாக இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் துயரங்களை பத்திரிகையில் நாம் அனைவரும் படித்திருப்போம். அவர்களின் வாழ்க்கையில் அமைதி ஏற்படாதவென ஏங்கும் நிலை சகலருக்கும் அதிகரித்து வருவதை நாம் அனைவரும் உணரக்கூடியதாக உள்ளது. அமைதி வருவதைப்போல நிழல் தெரிந்தாலும் அது கானல்நீரைப்போல மறைந்து விடுகிறது. அந்த வேதனையின் நிமித்தம் எமக்கு விடுதலை கிடையாத என்ற எண்ணத்துடன் மாத்திரமல்ல, விடுதலையைக் குறித்ததான எண்ணமற்றவர்களாகவும் வாழவேண்டி வருவதைக் காணும்போது நாம் அனைவரும் மிகவும் துக்கப்பட வேண்டியதாக உள்ளது.

அப்படியான துன்ப துயரங்களோடு வாழும் மக்களுக்காக இந்த அருமையான தியானத்தை எழுதுகிறேன். தேவனே என்னை விடுதலையாக்கி, உமது நாமத்தினால் என் (உங்களின்) வாழ்க்கையில் ஆறுதலைக் அடைந்து கொள்ள உதவும் என்ற எதிhபார்ப்போடு இதனை தியானிக்கவும்.

வேதப்புத்தகம் உள்ளவர்கள் சங்கீதம் 56ஐ முழுவதையும் முதலில் வாசிக்கவும். பழைய ஏற்பாட்டிலுள்ள சங்கீதப்புத்தகத்தில் தேவனை அண்டியவர்கள் பல்வேறு விதமான மனநிலைகளிலும் சூழ்நிலைகளிலும்பாடிய 150 பாடல்கள் உள்ளன. இவைகளில் 56ம் சங்கீதம் உயிருக்கு ஆபத்தான பயங்கரமான சூழ்நிலையில் இருந்த தாவீது என்ற பக்தனின் ஜெபமாக உள்ளது.

தாவீதை பெலில்ஸ்தர் பிடித்து கொலை செய்யப்படக்கூடிய ஓர் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டது. எந்த வகையிலும் தப்பமுடியாது என்று எண்ணக்கூடிய நிலை அவனுக்கு தோன்றியது. அத்தனைக்கு மத்தியிலும் தேவன் தன்னைக் காப்பார் என்னும் நம்பிக்கையில் இந்த சங்கீதத்தை ஒரு ஜெபமாக ஏறெடுத்தார்.

வசனம் 1-3. தேவனே, எனக்கு இரங்கும். மனுஷன் என்னை விழுங்கப் பார்க்கிறான். நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப் பார்க்கிறார்கள். உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர். நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.

முதலில் நாம் கவனிக்க வேண்டியது, பயப்படவேண்டிய சூழ்நிலைகள் வருவது இயற்கை. அப்போது நாம் மனிதரைவிட சகலத்திற்கும் பெரியவராக இருக்கும் தேவனை மாத்திரமே நம்புவதன்மூலம் நமது மனதில் இருக்கும் பயம் நீங்குவதற்கான வழியென்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த உண்மையை அறிந்த தாவீது பயத்தினால் மனந்தரளாமல் தேவனை நம்பி வாழும்போது பயம் தன்னை மேற்கொள்ளாது என நம்புகிறவனாக இருந்தான். அதனால் அவன் தனது பயத்தைவிட, தேவன் பேரில் உள்ள நம்பிக்கையை வெளிப் படுத்தினான்.

இரண்டாவது நாம் கவனிக்க வேண்டியது, வசனம் 4-11வரை. தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன். மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? நித்தமும் என் வார்த்தை களைப் புரட்டுகிறார்கள். எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழுஎண்ணமாயிருக் கிறது. அவர்கள் ஏகமாய்க்கூடி, பதிவிருக்கிறார்கள். என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்துவருகிறார்கள். என் அலைச்சல்களை தேவாPர் எண்ணியிருக்கிறீர்.

என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும். அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள். தேவன் என்பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்?

தாவீது பயப்பட்டபோது தேவனை நம்புகிறவனாகவும், அவன் தேவனை நம்பிய போது பயம் அவனை விட்டு நீங்கியுள்ளதையும் மேலே நாம் வாசித்து அறிந்து கொண்டோம். இது எவ்வளவு பெரிய உண்மை. தாவீது இந்த ஜெபத்தை ஏறெடுத்த வேளையில் மட்டுமே பயத்துடன் இருந்த காலமாகவுள்ளது.

பயம் இன்று மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் பலவகையில் விபரீதங்களை உருவாக்குகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. பயம் மனதை மட்டுமல்ல, சரீரத்தையும், குடும்ப உறவுகளையும், மனிதனின் அன்றாட வாழ்க்கையையும் பாதித்து இன்னும் பல விபரீதங்களையும் ஏற்ப்படுத்துகிறது.

தேவனிடம் மன்றாடும் தாவீது தனக்கு இரங்கும் என்று கேட்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இரக்கம் என்ற சொல்லிற்கு – கிருபையாக இருத்தல், அருள்புரிதல் – என்பது அர்த்தமாகும். அவன் தேவனிடத்தில் இருந்து கிருபையை எதிர்பார்த்து மன்றாடினான். கிருபை என்பது – பெறத்தகுதி இல்லாததைப் – பெறுவதாகும்.

மனிதர்களாகிய நாம் தேவனிடத்தில் இருந்து எதையும் பெற்றுக் கொள்ளத் தகுதி இல்லாதவர்கள். காரணம் நாம் பாவம் செய்து தேவமகிமையை இழந்து வாழ்கிறோம். அப்படியான மக்களுக்கு தேவன் கிருபை அளிப்பது, அவர் கிருபையுள்ளவராக இருப்பதனால். அவர் நம்முடைய புண்ணியங்களையும், சுயநீதியையும் கொண்டு மனிதர்களுக்கு இரங்குவதில்லை. மாறாக அவருடைய மாறாத மகாபெரிய இரக்கத்தை அடிப்படையாகக்கொண்டு அவரிடம் மன்றாடும்போது அவர் இரங்குகிறார்.

இன்று சிலவேளை துன்ப துயரங்களில், தனிமை என்ற சிறையிருப்பில், வெறுப்பின் விளிம்பில், மரணத்தைத்தவிர வேறுவழி இல்லை என்ற வேதனையில் வாழ்ந்து வருவீர்களாயின் தேவன் பேரில் நம்பிக்கை வைத்து அவரிடம் இரக்கத்தைப் பெற மன்றாடுங்கள். அவர் உங்கள் மன்றாட்டைக்கேட்டு உங்களைச் சுற்றியிருக்கும் பயத்திலும் இருந்தும் விடுதலை தந்து, ஆசீர்வாதமான, அமைதியான, பயமற்ற இளைப்பாறுதலான வாழ்க்கையை உனக்கு அளிப்பார்.

தேவனை மாத்திரம் நம்பி அவருக்கு மாத்திரம் பயந்து வாழ்பவர்களாயிருந்தால் நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை. ஆகவே வேதம் சொல்வதுபோல, உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழுஇருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையா யிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர் உன்பாதைகயை, வாழக்கையை, வழியை செவ்வைப்படுத்துவார். நீதிமொழி 3:5-6.

இந்த எண்ணத்தோடு கீழ்வரும் மன்றாட்டை தேவனிடம் ஒப்புவிப்போம்.

மகா அன்பும் இரக்கமும் உள்ள நல்ல பிதாவே, பயம் நிறைந்த வாழ்க்கையில் இருந்து உம்மேல் நம்பிக்கை வைத்து, மன்றாடும்போது உமது இரக்கத்தினால் ஆறுதலைக் காணமுடியும் என நம்பி உம்மிடத்தில் வருகிறேன் அப்பா. எனது மன்றாட்டைக் கேட்டு என்னைச்சூழவுள்ள பயங்களில் இருந்து விடுவித்து உமது பாதுகாப்புடன் கூடிய புதுவாழ்வு வாழ எனக்கு உதவி செய்து காத்து வழிநடத்தம் படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Related posts