ஐ.தே.மு வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி : மங்கள சமரவீர

கடந்த கால சம்பவங்களைப் படிப்பினையாக எடுத்துக் கொள்ளாத மஹிந்த ராஜபக்‌ஷ வழக்குகளை எதிர்கொண்டுள்ள தனது சகோதரரான கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியிருப்பதே தோல்வியை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, நாம் நிறுத்தும் ஐ.தே.மு வேட்பாளரே அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவாரென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சர், 2018 ஒக்டோபர் புரட்சியின் மூலம் சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றியபோதே மஹிந்த தமது முன்னைய தவறுகள் மூலம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதை தாம் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் மஹிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் அவரது ஆதரவாளர்கள் மூலம் ஜனநாயகத்துக்கு விரோதமாக அவர் செயற்பட்டார்.

ஆனாலும், நீதிமன்றம் துணிச்சலுடன் செயற்பட்டு மஹிந்தவுக்கு நல்ல பாடம் புகட்டியது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியில் இருந்து மஹிந்த ராஜபக்‌ஷ என்ன செய்தார் என்பது இப்போதுதான் எமக்குத் தெரிகிறது.

கோடிக்கணக்கில் நாட்டின் சொத்துக்களைச் சூறையாடியது போதாது என்று, தனது குடும்பத்தவர்களுக்கும் இப்போது கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்றும் மங்கள சமரவீர தனது அறிக்ைகயில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்ைகயில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மஹிந்த இன்னும் சரியான பாடம் படிக்கவில்லை. இல்லையென்றால் 11 பில்லியன் ரூபா ஊழலில் ஈடுபட்டதற்கு ஒரு நீதிமன்றத்திலும் 33 மில்லியன் ரூபா செலவில் தனது பெற்றோருக்கு நினைவு மண்டபம் கட்டிய வழக்கு இன்னொரு நீதிமன்றத்திலும் நடைபெறும் நிலையில் நீதியை தனக்கு வேண்டியவாறு வளைத்துப்போட்ட ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக எவரேனும் அறிவிப்பார்களா?

அது மட்டுமன்றி ஊடகவியலாளர்களை கொலைசெய்து, யுத்த வெற்றியாளரான சரத் பொன்சேகாவை சிறையிலடைத்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக எவரேனும் அறிவிப்பார்களா?

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவோ அல்லது வேறு எந்த ராஜபக்ஷக்களோ அல்ல. இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி ஊடகவியலாளர்கள் மற்றும் அப்பாவிகள் பலரின் இரத்தத்தை தனது கைகளில் தோய்த்து வைத்துள்ள ஒரு ‘கிரிமின’லாக இருக்கமாட்டார். இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஒரு இலங்கைப் பிரஜையாகவே இருப்பார்.

இலங்கையில் பிறந்து ஆனால் நாட்டைவிட்டு ஓடி வேறு ஒரு நாட்டில் சத்தியப்பிரமாணம் செய்த ஒருவராக அடுத்த ஜனாதிபதி இருக்கமாட்டார். ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யும் ஒருவரே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக இருப்பார் என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளினால் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ மெதமுலனவுக்கு திரும்பிச்சென்றார். தனது பிழைகளினால் ஏற்பட்ட தோல்வியினால் ஒரு பாடத்தை அவர் கற்றிருக்க வேண்டும். நாட்டின் பணத்தை மொத்தமாக கொள்ளையடித்தமைக்காக அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எமது ஊடகவியலாளர்களை வெள்ளை வான்களில் ஏற்றிச்சென்று திரும்பக் கொண்டுவராதவர் அவர். முத லில் தமிழர்கள் மீதும் பின்னர் முஸ்லிம்கள் மீதும் இனவாதம் கக்கியவர்.

கோத்தாபயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது மஹிந்தவின் விருப்பம். ஆனால் பிரஜா உரிமையே கேள்விக்குறியாகியுள்ள ஒரு ‘கிரிமினல்’ எமது நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதையிட்டு நான் தனிப்பட்ட ரீதியில் வெட்கப்படுகிறேன்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்த பின் நாட்டு மக்களுக்கு மஹிந்த விடுத்துள்ள செய்தி என்ன தெரியுமா?

எனது சகோதரர்களில் ஒருவர் அடுத்த ஜனாதிபதி, நான்தான் அடுத்த பிரதமர். இன்னொரு சகோதரர் சபாநாயகர், நான்காவது சகோதரர்தான் நாட்டின்பொருளாதாரத்துக்கு பொறுப்பு.

மகன் அடுத்த ஜனாதிபதி. அதன்படி இலங்கை மற்றும் இலங்கையர்கள் ராஜபக்ஷ குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து என்பதுதான் அவர் நாட்டு மக்களுக்கு விடுக்கும் அபத்தமான செய்தி.

உண்மையை சொல்வதானால் மொத்த ராஜபக்ஷ குடும்பமும் ஊழலுக்கும் மக்களை அச்சுறுத்துவதற்கும் பேர் போனது. கோத்தாபயவை ஜனாதிபதியாக்கும் அவர்களது முயற்சி பெரும் தோல்வியை சந்திக்கும். அரசியல் என்பது ஒரு நீண்டதூர ஓட்டம். அது குறுந்தூர ஓட்டமல்ல. நீண்டதூர மரதன் ஓட்டத்தில் முதலில் ஓடுபவர் வெற்றிபெற மாட்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Related posts