நேர்கொண்ட பார்வை’ வசூல் நிலவரங்கள் என்ன ?

நேர்கொண்ட பார்வை’ படத்தின் வசூல் நிலவரங்கள் என்ன என்பதை படக்குழு தெரிவித்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’நேர்கொண்ட பார்வை’. போனி கபூர் தயரித்து, அவரே நேரடியாக விநியோகஸ்தர்களிடம் கொடுத்து விநியோகம் செய்தார். ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படம் முதல் நாளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

விமர்சகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும், இந்தமாதிரியான கதையில் அஜித் நடித்ததை மிகவும் பாராட்டினார்கள். வசூல் ரீதியாகவும் இந்தப் படம் எப்படி இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் தயங்கியதால் மட்டுமே, தயாரிப்பாளரிடமிருந்து தமிழக விநியோகத்தை கைப்பற்றாமல் இருந்தார்கள்.

தற்போது 4 நாட்கள் முடிந்துள்ளதால், இந்தப் படம் தமிழகத்தில் மொத்த வசூலில் 40 கோடியைத் தாண்டியுள்ளது. இன்றும் (ஆகஸ்ட் 12) விடுமுறை என்பதால் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இந்தப் படம் கடந்த 4 நாட்களில் மட்டும் 5.5 கோடி வசூல் செய்துள்ளது. ஒவ்வொரு நாளுமே 1 கோடியைத் தாண்டியே வசூல் செய்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் போனிகபூர்.

முக்கியமாக மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இந்தப் படத்துக்கு நல்ல கூட்டம் இருக்கிறது. சி சென்டர்கள் எனப்படும் பகுதிகளில் மட்டும் மிகக் குறைந்தளவிலேயே வசூல் செய்து வருகிறது. முக்கிய நகரங்கள் அனைத்திலுமே நல்ல வசூலைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெளிநாட்டு வசூல் 1 மில்லியன் டாலரைத் தாண்டிவிட்டதாக தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் 250K டாலர்கள் வசூலித்துள்ளது. அஜித்தின் முந்தைய படமான ‘விஸ்வாசம்’ படத்தை விட இது அதிகம். ஏனென்றால் அந்தப் படம் ‘பேட்ட’ உள்ளிட்ட சில படங்களுடன் வெளியானது.

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் செய்து வருவதாகவும், விரைவில் இதற்காக முதலீடு செய்யப்பட்ட பணம் திரும்பிவிடும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.

தமிழகத்தில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் 120 கோடியைத் தாண்டி வசூல் செய்தது. அந்தளவுக்கு ‘நேர்கொண்ட பார்வை’ வசூல் செய்யுமா என்று கேட்டால், கண்டிப்பாக செய்ய வாய்ப்பில்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

“தமிழகத்தில் இப்போது வரை மொத்த வசூல் 40 கோடியைத் தாண்டியுள்ளது. அது 75 கோடிக்கு வந்தாலே போதும். இதில் முதலீடு செய்துள்ள அனைவருமே தப்பித்துக் கொள்வார்கள்” என்று முன்னணி விநியோகஸ்தர்கள் தெரிவித்தார். அஜித் இந்தப் படத்தில் நடித்ததே பெரிய விஷயம். அதில் இந்தளவுக்கு வசூல் செய்திருப்பதால் படம் கண்டிப்பாக ஹிட்டாகவே முடியும் என்று நம்பிக்கையுடனும் குறிப்பிட்டார்.

Related posts