மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் தூத்துக்குடி கடல் பகுதியில் கைது

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மாலத்தீவு நாட்டின் துணை அதிபராக இருந்தவர் அகமது அதிப். இவர் அந்த நாட்டு அதிபரை கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 15 வருட தண்டனை வழங்கப்பட்டது. 3 வருட ஜெயில் தண்டனைக்கு பிறகு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் வீட்டுக்காவலில் இருந்த அகமது அதிப் தலைமறைவானார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது.

அகமது அதிப் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் அவர் இந்தியாவிற்கு தப்பி ஓடி இருக்கலாம் என தகவல் வெளியானது.

இதற்கிடையே தூத்துக்குடியில் இருந்து சமீபத்தில் 9 பேருடன் சரக்கு கப்பல் மாலத்தீவுக்கு சென்றது. அந்த கப்பல் திரும்பி வந்தபோது 10 பேர் இருந்தனர். இதைத்தொடர்ந்து அந்த சரக்கு கப்பலை உளவுத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் வழிமறித்து விசாரித்தனர். அப்போது கூடுதலாக இருந்த நபர், மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமதுஅதிப் என்பது உறுதியானது.

இந்நிலையில் அகமத் அதிப் தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி கொண்டு வரப்பட்டுள்ளார்.

Related posts