மரண தண்டணையை நீக்குவது தொடர்பான சட்டமூலம்

மரண தண்டனையை முற்றாக நீக்குவது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.யான பந்துல லால் பண்டாரி கொடவினால் கொண்டுவரப்பட்ட தனிநபர் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியதையடுத்து ஐ.தே .க.வின் காலி மாவட்ட எம்.பி.யான பந்துல லால் பண்டாரி கொடவினால் மரண தண்டனையை இல்லாதொழிப்பதற்கான இச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

இச் சட்டமூலத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பி.யான மயில்வாகனம் திலகராஜ் வழி மொழிந்தார். இச் சட்டமூலத்தின்படி ஏதாவது ஒரு சட்டத்தில் மரணதண்டனையை விதித்தல் அல்லது மரண தண்டனையால் தண்டனையளித்தல் என்று கூறப்பட்டிருப்பது இச் சட்டம் அமுலுக்கு வந்தவுடன் வாழ்நாள் சிறைத்தண்டனைமூலம் தண்டனையளித்தல் எனத் திருத்தப்படும் .

அத்துடன் இச் சட்டமூலம் அமுலுக்கு வருமுன்னர் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கும் எந்த நபரும் அக்குறித்த குற்றத்திற்காக வாழ் நாள் சிறைத்தண்டனை வழங்கப்படடவராகவே கருதப்படுவார்.

அதுமட்டுமன்றி இச் சட்டமூலம் அமுலுக்கு வருமுன்னர் மரணதண்டனை வழங்கப்படக்கூடிய குற்றமொன்றை ஆளொருவர் புரிந்து அதற்கான தண்டனை நீதிமன்றத்தினால் இன்னும் வழங்கப்படாமலிருந்தால் அந்நபர் வாழ்நாள் சிறைத்தண்டனைக்குரிய குற்றமொன்றைப்புரிந்தவராகவே கருதப்படுவார்.

Related posts