தமிழர் அரசியலில் புதிய கூட்டணி?

தமிழர் அரசியலில் புதிய கூட்டு அமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்திற்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணி தொடர்பில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற நிலையில் விக்கினேஸ்வரன் தலைமையிலான அந்த மாற்று அணிக்கான பேச்சுவார்த்தைகள் குழப்பங்களை தோற்று வித்திருக்கும் நிலையில் மேற்படி இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே திடீரென இச்சந்திப்பு நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

கூட்டமைப்பிற்கு மாற்றாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அனந்தி ச்சிதரன் மற்றும் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் தலைமையிலான கட்சி அல்லது அமைப்புக்களும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக பேசப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதலமைச்சரின் புதிய மாற்று அணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை இணைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அவ்வாறு அந்தக் கட்சியை இணைத்துக் கொண்டால் தாம் அந்தக் கூட்டுக்கு வரப்போவதில்லலை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

இதனால் புதிய அணி அமைப்பது தொடர்பான பேச்சுக்கள் பெரும் இழுபறிகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இவ்வாறானதொரு நிலைமையிலையே சுயாட்சிக் கழகத்தின் அனந்தி சசிதரனுக்கும் மக்கள் முன்னணிக்கும் இடையில் திடீரென நேற்றையதினம் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் புதிய கூட்டு அமைப்பது தொடர்பான இந்தச் சந்திப்பானது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி தொடர்பில் அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்குவது தொட்ர்பில் பேசப்பட்டதா என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Related posts